மதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை துவங்கவுள்ள நிலையில் இப்போட்டியில் உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதில் அரசியல் குறுக்கீடு உள்ளதாகவும் கூறி அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் பிரபலமானவை.
காளை உரிமையாளர்கள் பேட்டி (ETV Bharat Tamilnadu) இவற்றில் அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை (ஜன.16) நடைபெறவுள்ளது. இப்போட்டி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதில் அரசியல் குறுக்கீடு அதிகம் உள்ளதாகவும் கூறி, அவற்றின் உரிமையாளர்கள் வாடிவாசல் முன் போராட்டத்தில் இன்றிரவு முதல் திடீரென போராட்டத்தில் இறங்கியுள்ளன். ஏறக்குறைய 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் காளைகளின் உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, " 900 -க்கும் அதிகமான டோக்கன்கள் உள்ளூர் காளைகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான காளைகள் களத்தில் இறங்க அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன.
இதனால் ஒவ்வொரு முறையும் காளைகளை அவிழ்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவதாக குமுறும் அவர்கள், இதற்காக அலங்காநல்லூர் விழா கமிட்டி மீது குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தேவையின்றி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் குறுக்கீடு அதிகம் உள்ளது." என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.