சென்னை: லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நடுவானில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் லண்டனில் தரையிறக்கப்பட்டது. மீண்டும் புறப்பட்ட அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 8 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 3.10 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று மதியம் 328 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. இந்த நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை அந்த விமானத்தின் விமானி கண்டுபிடித்து விமானத்தை தொடர்ந்து இயக்கினால் ஆபத்து என்பதால் அருகில் இருந்த லண்டன் விமான நிலையம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தார்.
இதையடுத்து சில நிமிடங்களில் அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்ட லண்டன் விமான நிலையத்திற்கே திரும்பி சென்று தரை இறங்கியது. இதையடுத்து லண்டன் விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பயணிகள் அனைவரும், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 8 மணி நேரத்திற்கு பின்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு நேற்றிரவு விமானம் லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.
இதையும் படிங்க:சபரி மலைக்கு சென்ற சேலம் ஐயப்ப பக்தர்கள் பேருந்து விபத்து; ஒருவர் பலி, 16 பேர் காயம்..!
இந்த விமானம் வழக்கமாக சென்னைக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும், ஆனால் இன்று சுமார் 8 மணி நேரம் தாமதமாக பகல் ஒரு மணியளவில் சென்னைக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த விமானம் வழக்கமாக சென்னையில் இருந்து மீண்டும் லண்டனுக்கு காலை 7.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால், இன்று அந்த விமானம் தாமதமாக சென்னைக்கு வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 8 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 3.10 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்கு 320 பயணிகள் தயாராகி இருந்தனர். அவர்களுக்கு விமானம் தாமதம் என்ற தகவல் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விமானத்தில் பயணிக்க இருந்த வெளியூர் பயணிகள் பலர் ஏற்கனவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டதாக கூறபடுகிறது.