தூத்துக்குடி: மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டிட தொழிலாளிகளான முருகன்-பாலசுந்தரி தம்பதி. இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற இரண்டு மகன்கள். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான்.
நகைக்காக கொலையா?
கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த கருப்பசாமி மாயமாகியுள்ளார். மாயமான சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றரை பவுன் தங்க செயின் மற்றும் கையில் 1 கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது.
அலசப்படும் சிசிடிவி
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்றதும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சிறுவனை தேடி பார்த்தனர். அங்குள்ள வீடுகளில் தேடினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்தனர். இருந்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், நேற்று காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும், இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி டி.எஸ்பி. ஜெகநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள மாடி, குடிநீர் தொட்டிகள் போன்றவற்றிலும் சோதனை செய்தனர். அது மட்டுமின்றி நேற்று அதிகாலை 4 மணி வரை அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அதன் பின்னர் தான் உடலை வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.