தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: மூவருக்கு நீதிமன்ற காவல்! - PETROL BOMB ISSUE UPDATE

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட சிறுவன் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம்
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2025, 10:18 AM IST

ராணிப்பேட்டை:சிப்காட் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (பிப்.3) நள்ளிரவு நேரத்தில் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். அதேபோல சிப்காட் வ.உ.சி நகரில் உள்ள அரிசிக்கடை ஒன்றின் வாசலிலும் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கடையின் முன்பகுதி கருகி லேசான சேதமடைந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிப்பட்டது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, சிப்காட் காவல் நிலையத்தை நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெட்ரோல் குண்டு வீசுவதற்காக முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதோடு, சென்னை, காஞ்சிபுரம், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

முதற்கட்டமாக சிப்காட் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழரசன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட தமிழரசனின் 18 வயது மகன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை சென்று 18 வயது சிறுவனைப் பிடித்ததோடு ராணிப்பேட்டைக்கு அழைத்து வந்தனர்.

அவ்வாறு வரும் வழியில் வாலாஜா டோல்கேட் அடுத்த வாணி சத்திரம் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக போலீஸ் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். காரை விட்டு கீழே இறங்கிய போது திடீரென சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ.முத்தீஸ்வரன், எஸ்.எஸ்.ஐ. கண்ணன் ஆகியோரை தாக்கியுள்ளார். இதனைக் கண்ட இன்ஸ்பெக்டர் சசிகுமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவனின் இடது கால் முட்டிக்குக் கீழே துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, முதல் முறை தவறிய நிலையில் இரண்டாவது முறையாக சுட்டுப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன், எஸ்.ஐ முத்தீஸ்வரன், எஸ்.எஸ்.ஐ கண்ணன் ஆகிய மூவரையும் போலீசார் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் இறுதியில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று பேருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா? அல்லது மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனரா? என விசாரணையை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு: பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு!

தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய பரத்(20) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் சென்னையில் கைது செய்யப்பட்டனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், “தன் மீதும், தன் தந்தையான சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் மீதும், தனது கூட்டாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ததால் ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக” வாக்குமூலம் அளித்ததாக ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் நீதிபதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரத்(20) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் ராணிப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி நவீன் துரை பாபுவின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.

இரண்டு பேரையும் விசாரித்த நீதிபதி இருவரையும் 18 நாட்கள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கில் முக்கிய குற்றவாளி தமிழரசனை கைது செய்த தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details