வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை சென்னை:உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தைச் சுற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். கோயில் வளாகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை, மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனையிட்டனர்.
முன்னதாக, இக்கோயிலின் செயல் அலுவலரிடம் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை எல்இடி திரைகள் அமைத்து ஒளிபரப்ப அனுமதி கேட்ட நிலையில், அதை செயல் அலுவலர் மறுக்கும் ஆடியோ வெளியாகியது. அந்த ஆடியோ பதிவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரின் X சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை கோயில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லியில் உள்ள கோயிலில், வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் வளாகம் மற்றும் கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: அயோத்தி விழா நேரலை வழக்கு; வாய்மொழி உத்தரவை யாரும் பின்பற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு!