தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி அணையில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 550 கன அடி என மொத்தம் 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று மாலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல் ஐந்தருவி, தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக காட்சியளித்து வந்த நிலையில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.