திருநெல்வேலி:நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தனது தேர்தல் பரப்புரையை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவக்கியுள்ளார். அதற்காகத் திருநெல்வேலியில் உள்ள டவுன் ஈசான விநாயகர் கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டு, பின்னர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
அப்போது, மேளதாளம் கட்சியினரின் முழக்கங்கள் என ஆரவாரத்துடன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக அனைவருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும்" என்று கூறி வாக்குகளைச் சேகரித்தார்.
மேலும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலித்துக் கொண்டே தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் போட்டியிட்டாலும், ஆரம்பத்தில் அவர் ஒரு தீவிர அதிமுக விசுவாசி, எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் பணியாற்றியவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் 5 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவர். அதிமுகவில் மாவட்டச் செயலாளர் உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.