தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டெல்லி வேண்டாம் தமிழகம் அரசியல் தான் பிடிக்கும்" - அண்ணாமலை கூறிய காரணம் என்ன? - BJP State President Annamalai - BJP STATE PRESIDENT ANNAMALAI

Annamalai: அமைச்சர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினே கோவையில் வந்து தங்கி இருந்தாலும், பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

BJP State President Annamalai
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 11:36 AM IST

அண்ணாமலை

கோயம்புத்தூர்:பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, டெல்லியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமாலை, "கோவை மக்களவைத் தொகுதியில், மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது.

70 ஆண்டுகளாக தமிழகத்தில் தலைவிரித்தாடும் அதர்மத்திற்கும், மறுபுறம் தர்மத்திற்குமான போட்டி. தமிழக அரசியலின் மாற்றம், கோவையில் இருந்து தொடங்க வேண்டும். கோவையை இந்தியாவின் மேப்பில் (Map) அல்ல, இன்டர்நேஷனல் மேப்பில் பதிய வைக்கப் போகின்றோம். தமிழகத்தில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், முடிவாகிவிட்டனர். கூட்டணி கட்சி தலைவர்களும், அவர்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.

இது சரித்திர தேர்தல். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வென்று, ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய சரித்திரம் ஆரம்பமாகும். டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசியலில் தான் விருப்பம். பிரதமர் மோடி உத்தரவிட்டதால் போட்டியிடுவேன். நான் அவரின் உத்தரவை மதிப்பவன், உத்தரவிற்கு கட்டுப்பட்டவன். என்னுடைய அரசியல் தமிழகத்தில் இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதற்கு காரணம், 2026ல் ஆட்சிக்கு வருவதற்காகத்தான். கோவையை அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டும். 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் பொழுது, எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களால், இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக எதற்காக தனியாக 23 இடத்தில் போட்டியிட வேண்டும். அந்தப் பகுதிகளை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், வளர்ச்சி என்றால் என்ன என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவும் தான் இந்த போட்டி. இந்த இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாக தமிழக அரசியலை மாற்றுவது மட்டுமில்லாமல், நிஜ வளர்ச்சி என்ன என்பதை, தேர்தலில் வெற்றி பெற்றுக் காட்டப் போகின்றோம்.

தெளிவான பார்வையோடு இருக்கின்றோம். பிரதமருக்கு 80 சீட் உத்தரபிரதேசத்தில் இருக்கிறது. இன்னும் அவர் வடமாநிலங்கள் பக்கம் போகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், ஏதாவது ஒரு தலைவர் வெளிநாட்டு பயணம் போய் இருப்பார்களா? 2024ல் கிடைக்கும் எம்.பி மூலம், 700 நாட்கள் களப்பணியாற்றுவோம். அதனைத் தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

திமுக தேர்தல் அறிக்கையினை கொடுப்பதும், அதில் இருப்பதை எல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கையான ஒன்று. 2026ல் பெட்ரோல், டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். டாய்லட் பேப்பர் இல்லை என்றார், திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன் படுத்துங்கள். 2019ல் கொடுத்த 295 வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டு, 2024 தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.

கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் எனக்கு சண்டை கிடையாது. பிரச்சாரத்தின் போது, அவர்களது பெயர்களைக் கூட நான் சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு தான் என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது. இது அதர்மத்திற்கும், தர்மத்திற்குமான யுத்தம். அமைச்சர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு முதலமைச்சரே வந்து கோவையில் தங்கி இருந்தாலும், பாஜக நிச்சயம் வெற்றி பெறும். கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தைக் கோடி கோடியாக கொட்டுவார்கள்.

ஆனால், நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கின்றோம்.
செலவு குறைந்த தேர்தலாக, இந்த தேர்தல் இருக்கும். அடுத்த 40 நாட்கள் பூத கண்ணாடி போட்டு ஊடகங்கள் எங்களை பார்க்க வேண்டும். 33 மாதமாக சம்பாதித்த ஆயிரக்கணக்கான பணத்தை, இங்கு வந்து திமுகவினர் செலவு செய்வார்கள். ஆனால், பாஜக ஒரு தேர்தல் விதிமீறலில் கூட ஈடுபடாது.

தமிழக அரசியலின் மாற்றம், கோவையில் இருந்து தொடங்க வேண்டும். எங்களது 19 வேட்பாளர்களின் பெயர்களைப் பாருங்கள். அவர்களது தகுதிகளைப் பாருங்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றாவது இருக்கின்றதா? என்பதை பாருங்கள். பிற கட்சிகளில் வலை வீசி வேட்பாளர்களைத் தேடுகின்றனர், மாற்றுகின்றனர்.

தருமபுரி வேட்பாளராக சௌமியா அன்புமணி நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். சுற்றுச்சூழலில் நிறைய பணிகளைச் செய்திருக்கிறார். எல்லோருடைய அனுபவமும் தமிழக அரசியலுக்கு வரவேண்டும். அதன் மூலம், தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும். சௌமியா அன்புமணிக்கு எனது வாழ்த்துக்கள். 2024 தேர்தலில், தமிழகம் முழுவதிலும் வளர்ச்சி பணியைக் கொண்டு வர வேண்டும். பிரதமரின் ரோடு ஷோவை லட்சக்கணக்கானோர் பார்க்க வருகின்றனர்.

அந்தப் பகுதியில் விடுமுறை கொடுத்திருக்கின்றார்கள். அந்த குழந்தைகள் விடுமுறை கொடுக்கப்பட்டதால் தான், தங்களுடைய பிரதமரை பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர். விடுமுறை விட்டது யார்? பிரதமர் வரும் பாதையில் விடுமுறை அளித்த காரணத்தால் தான், மாணவச் செல்வங்கள் பிரதமரைப் பார்ப்பதற்காக வந்தனர். பிரதமரை பெட்டிக்கடை அரசியல்வாதி போன்று பார்க்காதீர்கள். அவர் விஸ்வ குரு. பள்ளி குழந்தையை நாங்கள் போய் அழைத்து வரவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க:"கோவை தொகுதியில் அண்ணாமலை”.. நழுவிச் சென்ற எஸ்.பி.வேலுமணி! - SP Velumani About Annamalai

ABOUT THE AUTHOR

...view details