சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பா.ஜ.கவில் விருப்பமனு அளித்திருந்த நிலையில் சீட் வழங்கப்படாததால் அதிர்ச்சியில் இருந்த பாஜக மாநில பட்டியல் சமூக அணித் தலைவர் தடா பெரியசாமி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தடா பெரியசாமி இன்று காலை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இனைத்து கொண்டார்.
அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி, "சிதம்பரம் தொகுதி என்பது தன்னுடைய தொகுதி அங்கு சம்பந்தமே இல்லாமல் வேலூரில் இருந்து ஒரு பெண்மணியை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள், பட்டியல் அணி மாநில தலைவராக உள்ள என்னிடம் ஏதும் கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தான் என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிதம்பரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன், பாஜக பட்டியல் அணி மாநில தலைவருக்கு மரியாதை என்பது துளியளவு கூட இல்லை, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் திட்டமிட்டே தன்னை தவிர்த்து வருகின்றனர் என்றார்.