சென்னை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக நடத்தப்பட்ட சர்வேயில் 13 சதவீதம் வாக்குகளும் 5 எம்பி இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட 10 சதவீதம் வாக்குகள் உள்ள இரண்டு கட்சிகள் பாஜகவுடன் இணைந்துள்ளன. இதனால் இந்த கூட்டணியின் பலம் திமுக கூட்டணிக்கு மாற்று என்ற பலத்தை அடைந்துள்ளது. எனவே, இரட்டை இலக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஒட்டிய வாக்கு சதவீதம் இருக்கும்.
ரூ.2000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் கடத்தலை திமுக அயலக பிரிவு இணைச் செயலாளர் ஜாபர் சாதிக் செய்தார். மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் பேர்வழி திமுக நிர்வாகியாக இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். அது குறித்து விவாதிக்கப்படவில்லை.
திமுகவினர் அடிப்படை சித்தாந்தமே கட்டுக் கதைகளையும், பொய்களையும் கூறுவது தான். ஆரியவாதத்திற்கு சரியான இடம் குப்பைத் தொட்டியே என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். குஜராத் கடற்கரை பகுதிக்கு 60 கிலோ மீட்டர் உள்ளே ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய போதைப் பொருளைக் குஜராத் போலீஸ் கடமை தவறாமல் பிடித்துள்ளது.
போதைப் பொருள் குஜராத் மாநிலத்தில் இருந்து வரவில்லை. ஆப்கானிஸ்தானத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள நபருக்குக் கொடுக்க கொண்டுவரப்பட்டதைக் குஜராத் போலீஸ் கைப்பற்றி உள்ளனர். திமுகவில் ஆர்.எஸ்.பாரதி போன்று உள்ளவர்கள் பேசுவதை நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயணம் செல்வதைத் தவிர வேறு எதையும் சரியாகச் செய்வதில்லை. தமிழ்நாட்டில் பேராவூரணியில் 800 கிலோவும், திண்டுக்கல்லில் 450 கிலோவும் கஞ்சா பிடிபட்டுள்ளது.
ஜாபர் சாதிக் 2017 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு 38 கிலோ கேட்டமைன் கடத்தலில் கைதானவர். அவருக்கு, கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுத்தது, முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல் இல்லையா? முதலமைச்சரின் தகப்பனார் கருணாநிதி 1937 முதல் 1970 வரை 33 ஆண்டுகள் குடி என்றால் என்னவென்று தெரியாத தமிழர்களைக் குடிக்க வைத்தவர்.
அதற்கு முன்பு தமிழ்நாட்டில் மது முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. மதுவிலக்கை ரத்து செய்து தமிழர்களைக் குடிக்க வைத்தது கருணாநிதி குடும்பம். அதனை அதிமுக தொடர்ந்ததால் அவர்களும் குற்றவாளிகள்தான். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வந்தால் அந்த பையில் என்ன பொட்டலம் வைத்திருக்கின்றனர் என பெற்றோர்கள் தேடும் அளவிற்குத் தமிழகத்தை ஸ்டாலின் நிர்வாகம் சீரழித்து விட்டது.
முதலமைச்சர் வார்த்தைகளை யோசித்துப் பயன்படுத்த வேண்டும். அவர் மத்திய அரசிடம் மோத வேண்டாம் என கூறியுள்ளார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகராவின் மகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில துணை முதல்வர் ஏற்கனவே ஒன்றை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதாரங்களின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடியட்டும், டெல்லி மதுபான வழக்கின் கைதுபோல திமுகவிலும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தில் கைதாவார்கள். எனவே முதலமைச்சர் அநாவசியமாக மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பினால் எல்லா விதத்திலும் உங்களை தண்டிக்கின்ற உரிமை பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைக்கும்.
மத்திய அரசு எங்கே சர்வாதிகார ஆட்சி நடத்தினால் எப்படி அரசாங்கத்தைப் பேச முடியும். பேசும் அளவிற்கு உரிமை இருக்கிறது அல்லவா? அதிலிருந்து இது சர்வாதிகார அரசு இல்லை என்பது தெரிகிறது. ஏனென்றால் நெருக்கடி நிலையின் போது நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்.
உங்களின் தகப்பனார் ஆட்சி நெருக்கடி நிலையின் போது ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்பொழுது காவல் நிலையத்தில் என்ன ட்ரீட்மென்ட் கிடைத்தது. பாஜக அரசு உங்களை டிஸ்மிஸ் செய்து விட்டதா? நாங்கள் எதுவும் டிஸ்மிஸ் செய்யவில்லையே? அப்புறம் எப்படி சர்வாதிகார ஆட்சி என கூற முடியும்?
உங்கள் அமைச்சரவை முழுவதும் ஊழல் குற்றம் செய்து ஒன்று ஜெயிலில் இருக்கின்றனர் அல்லது பெயிலில் இருக்கின்றனர். செந்தில் பாலாஜி ஜெயிலிலும், பொன்முடி பெயிலிலும் இருக்கின்றனர். பொன்முடியின் தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது அவருடைய வழக்கிற்குத் தடை விதிக்கவில்லை.
இறுதித் தீர்ப்பு வரட்டும், குறைந்தது ஒரு டஜன் திமுக மந்திரிகள் சிறைக்குப் போவார்கள் எல்லாருக்கும் எதிராகவும் ஆதாரங்கள் உள்ளது. ஆளுநரை அவதூறு பேசுவது என்பது திமுகவிற்கு இன்று நேற்றைய பழக்கமல்ல. மரபணுவே அதுதான். அவர்களின் இழிந்த மனநிலை ஆளுநருக்கு விரோதமானதாக இருக்கிறது.
தமிழகத்தில் மழை வெள்ளம் வந்த மறுநாள் அமைச்சரவையின் மூத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னைக்கு வந்தார். ஒரு அரசாங்கத்தில் அனைத்திற்கும் பிரதமர் வர வேண்டுமா? தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது நிதி அமைச்சர் வருகை தந்தார்.
ஆனால், தமிழ்நாட்டிற்குள் உள்ள வேங்கைவயலில் பட்டியல் சமுதாய மக்கள் உபயோகப்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனைக்கு முதலமைச்சர் சென்றாரா? அல்லது அந்த ஊர் அமைச்சர்கள் ரகுபதி அல்லது மெய்ய நாதன் சென்றார்களா? இதுதான் சமூக நீதியா? பட்டியல் சமுதாய மக்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் மலம் கலந்த வரை இதுவரை யார்? என்பதைக் கண்டுபிடிக்க இயலாத அரசாங்கம். நீங்கள் மத்திய அரசு பற்றியும் பிரதமரைப் பற்றியும் பேசலாமா? பிரதமர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தால் வலிக்கிறதா? சீட்டு போய்விடும் என பயந்து பேசுகிறீர்களா?
1967 இல் ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு 2024 முடிவு. இது ஆரம்பம் 2026 இல் உண்மையான விளையாட்டில் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது. 2014 ஆம் ஆண்டு அனுமதி கொடுக்கப்பட்டதற்கு 2019ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மருத்துவமனையை சிங்கிப்பட்டியில் அமைப்பதா? மதுரையில் வைப்பதா என சிங்கி அடித்தீர்கள். அதுவும் திராவிட அரசாங்கம் தான்.
இடத்தை முடிவு செய்ய 5 ஆண்டு எடுத்துக் கொண்டதுடன், ஜப்பான் நாட்டின் நிதி உதவி பெறுவதற்கு ஆவணங்களையும் அளிக்கவில்லை. தற்போது பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஒருவர் செங்கல் திருடனாக இருக்கிறார் அந்த ஒரு செங்கல் இல்லாவிட்டால் மற்ற வேலைகளை முடித்துவிட்டு கடைசியாக அந்த ஒரு செங்கல்லை உதயநிதியால் திருடப்பட்டது என மேலே வைத்து விடுவோம்.