சென்னை: தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று (ஜூன் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் பரபரப்புகளுக்கு இடையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தற்பொழுது புதிதாக நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இதில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் வரை தற்பொழுது மருத்துவப் படிப்புகளை எளிதாக படிக்க முடிவதற்கு காரணமாக இருப்பது இந்த நீட் தேர்வு தான். குறிப்பாக, கடந்த காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் இல்லாத நிலை இருந்தது. ஆனால், நீட் தேர்வு வந்த பிறகு அப்படி அனைத்து மாவட்டத்திலும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் பயிலக் கூடியதைப் பார்க்க முடிகிறது.
மேலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் பொழுது, அதற்கான அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. அப்படி கூறுவது ஒரு முதலமைச்சருக்கு அழகு இல்லை” என்றார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்ணீரும் இலையும் இனி ஒட்டுவதற்கான வாய்ப்பே கிடையாது என்று கூறியதற்கு பதில் அளித்தவர், “தண்ணீர் எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், இலை அப்படி இல்லை. இலை கருகி விட்டால் தண்ணீருடன் ஒட்டாது” என்றார்.