கோயம்புத்தூர்:அண்மையில் நடந்த கல்வி விருது விழாவில், “எதிர்காலத்தில் அரசியலும் கேரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும் எனவும், நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியிருந்தார். இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் கருத்திற்கு, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "படித்தவர்கள் அரசியலுக்கு வருவதைவிட, மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்கும் உணர்வு கொண்டவர்கள்தான் இன்றைக்கு அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள் " என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை, தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (திங்கட்கிழமை) துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துறை அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால், தொகுதியில் பல்வேறு சாலைகள் மோசமாக உள்ளV, சூயஸ் பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலைகள் முழுமையாக போடப்படவில்லை.
அமைச்சர் கோவை வரும்போது தெற்கு தொகுதிக்கு ஒரு மணிநேரம் ஒதுக்க வேண்டும். 30 நாட்கள் நடத்தப்பட வேண்டிய சட்டமன்ற மானிய கூட்டம் எட்டு நாட்கள் மட்டும் நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அதிகமான குறுக்கீடுகள் இருந்தன. தொகுதி தொடர்பாக பேசிய வீடியோக்கள் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை. ஜனநாயக தன்மையுடன் சட்டப்பேரவை இயங்கவில்லை.
நீட் தேர்வு:கோத்தகிரி சாலையில் இந்தியா ஒழிக எனவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் பிரிவினை தூண்டும் விதமாக சாலையில் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மக்களை போராட தூண்ட வேண்டும், அதன் வாயிலாக கலவரத்தை கொண்டுவர மாநில அரசு விரும்புகிறது" என்றார்.
தவெக தலைவர் விஜய் கருத்து:தவெக தலைவர் விஜய் தமிழகத்திற்கு படித்த நல்ல தலைவர்கள் வேண்டும் என்று கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் வேண்டும் என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நல்ல தலைவர்கள் வந்தால் மக்கள் வரவேற்பார்கள். நல்ல தலைவர்களை உருவாக்க அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளை செய்கின்றனர். விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். எந்த அளவுக்கு வெற்றி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு முன்பு ஒரு பேசுபொருளாக இருந்தது. ஆனால், தற்போது உயர்கல்வியுடன் அரசியலில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இன்றைக்கு எம்எல்ஏக்கள் பலரே டிகிரியை முடித்தவர்களாக தான் இருக்கிறார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதைவிட, மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்கக் கூடியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது கருத்து.
சினிமாவின் தாக்கம் சமூகத்தில் இருக்கிறது. புகைபிடிக்கும், மது அருந்தும் காட்சிகளில் நடித்த சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது அதற்கு பதில் அளிக்க வேண்டும். சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தலைவராகிய பின்னர் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்” என்று வானதி சீனிவாசன் கூறினார்.
புதிய குற்றவியல் சட்டங்கள்:"மத்திய அரசு மூன்று புதிய சட்டங்களை இன்று அமலுக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சட்டங்களின் பெயரை பொறுத்தளவுக்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழியில் இருப்பதால் உச்சரிப்பதில் சிரமம் இருக்கிறது. இதுதொடர்பாக எங்களது கருத்துக்களை மத்திய தலைமையிடம் தெரிவித்துள்ளோம்" என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
புதிய குற்றவியல் சட்டங்களில் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் கூறுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "மற்ற மாநிலங்களுடன் கலந்து பேசித்தான் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மரண தண்டனை வரை கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் வேண்டும்" என்றார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர், ஆளுநருக்கு எதிராக மிக தனிப்பட்ட முறையில் எதிர் மனநிலையோடு பேசுவது உயர்கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ஆளுநர் பேசும் விடயங்களை நானா ..நீயா..என்கிற வகையில் மாநில அரசு எடுத்துகொள்கிறது. ஆளுநர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்கு எதிராக பேசுவதாக எடுத்து கொள்கின்றனர்" என்றார்.
டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "திராவிட மாடலில் கிக் தான் முக்கியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றார். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும், பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
இதையும் படிங்க:பழைய குற்றவியல் சட்டங்கள் Vs புதிய குற்றவியல் சட்டங்கள்! வித்தியாசம் என்ன?