தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து! - BJp MLA Nainar Nagendran

BJP MLA Nainar Nagendran: நீட் தேர்வு ஆரம்பித்து இத்தனை வருடங்களில் இதுவரை எவ்வித குளறுபடியும் நடந்தது கிடையாது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் புகைப்படம்
நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 5:11 PM IST

சென்னை:நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) சிறு, குறு, நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மதுவிலக்கு, காவல் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது.

இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் இன்று பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாஜக அகில இந்திய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டில் இயற்கை வளக் கொள்ளை எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதைக் கூறும் வகையில், நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அளித்தோம். அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, ரூ.4,700 கோடிக்கு தமிழக மக்களின் மண் வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வானதி சீனிவாசன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால், இந்த விவகாரம் பற்றி விவாதத்திற்கு எடுத்து கொள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி மறுத்துவிட்டார். அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் மணல் கொள்ளை நடைப்பெற்றுள்ளது. அரசுக்கு வருமானம் வராமல், இடையில் உள்ளவர்கள்அதனை எடுத்துக் கொள்கின்றனர். இதன் மீது விவாதம் மேற்கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்?

நீர்வளத்துறை சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கப் அளிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் இந்த கப்பில் மணலை நிரப்பி எதிர்கால தலைமுறைக்கு இதுதான் மணல் என்று காட்டும் சூழல் ஏற்படானல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதலமைச்சர் இன்று நீட் தேர்வு வேண்டாம் என்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். எம்பிபிஎஸ் படிக்க ஒரு கோடி, முதுகலை படிப்புக்கு ஐந்து கோடி வரை செலவாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சுலபமாக ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வை வைத்துள்ளது.

நீட் தேர்வை பொருத்தவரை ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பினர். 7.5 சதவீத இட ஒதுக்கீடுகள் கேட்டனர். அது வழங்கப்பட்டது. முன்னாள் ஆட்சிக் காலத்திலும் தீர்மானம் போடப்பட்டது. அது திருப்பி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறை தற்போது நடக்காத விஷயத்திற்கு திரும்பத் திரும்ப தீர்மானம் போடுகிறார்கள்.

உண்மை மெதுவாக சேரும், பொய் வேகமாக சேரும் என்பது போல் திரும்பத் திரும்ப பொய் சொல்லி அதை உண்மையாக பார்க்கிறார்கள். நீட் தேர்வு ஆரம்பித்து இத்தனை வருடங்களில் இதுவரை குழப்படி நடந்தது கிடையாது. இந்த ஆண்டு ஒரு மாநிலத்தில் தேர்வு முறையில் சில முறைகேடுகள் நடந்துள்ளது. அது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இருந்தும் நீட் தேர்வு வேண்டாம் என்று இன்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்லி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். தேசிய தேர்வு முகமை என்பது தனியார் அமைப்பு கிடையாது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒர் அமைப்பு” இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும். தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்த தனி தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

இந்தத் தீர்மானம் தவறானது, ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்று இருக்கிறார்கள்” என்றார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “பாஜகவிற்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது. அவர்களின் பத்தாண்டுகளா ஆட்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் மோசமான. அதுமட்டுமல்ல, நாட்டைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி வந்தனர். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் நமது ராணுவத்தையும் தனியார் மயமாக்கி இருப்பார்கள்.

பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இவர்களுக்கு நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை பற்றி தெரியாது. 1980-ல் காந்தி படத்தை பார்த்துத்தான் காந்தியை பற்றி தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில்தான் இன்றைய பிரதமர் இருக்கின்றார் என்றால் இவர்களது யோக்கியதை என்னவென்று பார்க்க வேண்டும்.

நாட்டுக்காக, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து நாட்டை காப்பாற்றியவர்கள். குறிப்பாக, இந்திரா காந்தியிடம் பாகிஸ்தான் வாலாட்டியது என்ற காரணத்துக்காகவே பாகிஸ்தானை இரண்டாக உடைத்து வங்க தேசத்தை ஏற்படுத்தினார். ஆகையால், அவரின் வீரச் செயலை புகழ வேண்டுமே தவிர பொறாமையின் காரணமாக அவரை விமர்சிப்பது தவறு” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க:சட்டப் பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details