கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருபவர்கள் ரவி - ஆபிதா தம்பதி. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த சிலர் இங்கு கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் இறைச்சி விற்றுக்கலாம் ஆனால் பீப் எனப்படும் மாட்டு இறைச்சியை விற்க கூடாது என மிரட்டும் விடியோ காட்சி சமூக ஊடங்களில் வைரலானது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பீப் பிரியாணி கடை நடத்துநரான ரவி கூறுகையில், “நாங்கள் இந்த பகுதியில் 12 நாட்களாக கடை நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக நிர்வாகி சுப்பிரமணி என்பவர் எங்கள் கடைக்கு வந்து இங்கு பீப் விற்க கூடாது என மிரட்டினார். நாங்கள் ஏன்? விற்க கூடாது இந்த பகுதியில் அதிகளவிலான சிக்கன், மீன், மட்டன் உணவகங்கள் உள்ளன, அதேபோல் நாங்களும் விற்கிறோம் என்றேன். அதற்கு அவர் இங்கு கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகில் பீப் கடை இருக்க கூடாது. சாமிக்கு ஆகாது என்றார். மேலும் சிக்கன், மீன் கடை இருந்தால் பரவாயில்லை ஆனால் பீப் இருக்க கூடாது என்றார்.
இதையடுத்து நாங்கள் கவுன்சிலரிடம் அனுமதி பெற்று அதே இடத்தில் கடை நடத்தினோம். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் (ஜனவரி 6) பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீண்டும் கடைக்கு வந்து தகாத வார்த்தைகளால் எங்களை பேசினார். மேலும் கடையை காலி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என தெரியாது எனக்கூறி ஆட்களை வைத்து மிரட்டினார். அப்போது கவுன்சிலரிடம் மீண்டும் இது குறித்து கேட்டோம். அதற்கு அவர் இந்த பகுதியில் இனி சிக்கன், மீன், மட்டன் என எந்த கடையும் இருக்காது. நீங்களும் அந்த இடத்தில் கடையை வைக்க வேண்டாம் என்றார்.
இதையடுத்து தற்போது அங்கிருந்து தள்ளி வந்து, மூன்று சந்திப்பு என்னும் இடத்தில் கடையை வைத்துள்ளோம். நாங்கள் அன்று சுப்பிரமணி எங்களை மிரட்டியதை விடியோ எடுத்து சமூக ஊடங்களில் வெளியிட்டோம். அதைப் பார்த்து சரவணம்பட்டி காவல் துறையினர் வந்தனர். ஆனால் நாங்கள் புகார் கொடுக்கவில்லை. இனி இது போன்று மிரட்டலோ, அச்சுறுத்தலோ இருந்தால் உடனடியாக சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் அணுக கூறினார்கள். இந்த பிரச்னைக்கு காரணம் சாதி தான் என நினைக்கிறேன். நான் என் வருமானத்திற்காக இதை செய்கிறேன் ஆனால் நான் யாரையும் வற்புறுத்தி பீப் சாப்பிட சொல்லவில்லை. பிடித்தவர்கள் சாப்பிலாம்” என்றார்.