சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அப்போது, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக, "ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' எனக் கூறினார். இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அது தொடர்பாக தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில், "கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்து கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K.சிங் தெளிவாக பதிலளித்துள்ளார்.
இந்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு 150 கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்று கூறினார்.
ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம் TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தை பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியிருந்தார்.