கோயம்புத்தூர்:கோவை ஆடீஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை,பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கலாமணி ஜெகநாதன், டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர் பாசறை மாநில துணைத் தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அப்போது நாதக மாநில துணைத் தலைவர் ஆனந்தராஜ் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை செல்ல உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவு பிரச்சனை தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் அண்ணாமலை வாங்கி உள்ளார். தேர்தல் பத்திரம் முறைகேடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் தான் வெளிவந்தது.
இந்த தகவலைப் பெறப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில், அண்ணாமலை கச்சத்தீவு குறித்து உடனடியாக தகவல்களைக் கேட்டு வாங்கி உள்ளார். இது அரசியலுக்காகவும்,வாக்குகள் பெறவும் கச்சத்தீவு பிரச்சினை கொண்டு வந்துள்ளனர். மீனவர்கள் மீது உள்ள அக்கறையில் செய்யவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக 21 முறை ஸ்டாலினுக்குப் பதில் அளித்துள்ளேன் என கூறி இருக்கிறார்.
நூறு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக, மீனவர்கள் மற்றும் தனிநபர் ஒருவர் என 4 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாஜக அரசு பத்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்வு அளிக்க வேண்டும். பதில் மனு அளிக்கக் கூடாது. இலங்கைக்குப் பிரதமர் மோடி, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் ஆகியோர் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளனர்.
அப்போது இது பற்றி எல்லாம் பேசவில்லை. இப்போது தேர்தல் என்பதால் பேசி வருகின்றனர். காலியான பெருங்காய டப்பா வைத்துத் தான் பாஜகவினர் பேசி வருகின்றனர். இலங்கைக்குள் சீனா அரசு ஊடுருவி 200 ஏக்கர் 99 ஆண்டுக் குத்தகை எடுத்து உள்ளது. இலங்கையின் அனைத்து கிராமங்களிலும் உள்ளனர். மாலத்தீவிலும் சீனா ஊடுருவி உள்ளது. இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.