தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று சொன்ன அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி" - ஹெச்.ராஜா கிண்டல்! - h raja - H RAJA

சாராயக் கடையில் போலி சரக்கு தான் விற்கப்படுகிறது என்று கூறியுள்ள திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகனை பாராட்டுகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மற்றும் ஹெச்.ராஜா புகைப்படம்
துரைமுருகன் மற்றும் ஹெச்.ராஜா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 3:11 PM IST

திருவாரூர்:திருவாரூர் - நாகை புறவழிச்சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியிலிருந்து மாநில, மாவட்ட, நகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறுகையில், "தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் ஒரு சாபக்கேடு. எல்லாத் துறைகளிலும் எல்லா விதத்திலும் தோற்றுப் போன அரசாக இது உள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கடையைத் திறந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான்.

கள்ளக்குறிச்சியில் 65 பேருக்கு மேல் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். ஸ்டாலின் உள்ள படியே வெட்கப்பட வேண்டும். முதலில் செய்யவேண்டிய பணி என்னவென்றால் இளைஞர்களை சீர்ப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு இந்த திராவிட இயக்கங்கள்.

இவ்வளவு மோசமாக ஆட்சியை தந்து கொண்டிருப்பவர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என நினைக்கிறார். நாடாளுமன்றத்தில் இதே மாதிரியா அங்கு தகராறு பண்ணுகின்ற இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் எல்லாம் வெளியேற்றிவிட்டு சபை நடத்துகிறோமா?.

இஸ்லாமிய பயங்கரவாதம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வேரூன்றி உள்ளது. நேற்று என்ஐஏ 10 இடங்களில் சோதனை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினரை வெளியேற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உடனடியாக எல்லாவிதமான போதைப் பொருட்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாராயமாக இருந்தாலும் கள்ளச்சாராயமாக இருந்தாலும் திமுககாரங்க தான் விற்கிறார்கள் என உள்ளபடி தெரிகிறது. இதில் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

சாராயக்கடையிலேயே போலியை சரக்குதான் விற்கப்படுகிறது என பேசுகிறார். அவரை நான் பாராட்டுகிறேன். திமுகவின் அவலங்களை வெளிப்படையாக எடுத்துச் சொல்லுகிற ஒரு அமைச்சராக இருக்கிறார். எல்லா விதத்திலும் தோற்றுப்போன அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதேவிட ஸ்டாலின் ராஜினாமா செய்வது கௌரவம்" என்றார் ராஜா.

தொடர்ந்து பேசிய அவர்,"புதிய குற்றவியல் சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு லீவு வேண்டும் என்பதற்காகப் போராடலாமா? பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு இவர்கள் பேசுவது முறை இல்லை. வழக்கறிஞர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக அரசு தான். இதை செயல்படுத்த சொன்னது உச்ச நீதிமன்றம். இதனை பாஜக சர்க்கார் கொண்டு வந்தது இல்லை. நீட் வேண்டாம் என்று பேசுவது முட்டாள்தனம். தவறு நடந்தால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத்தான் சிபிஐ விசாரணை போட்டு இருக்கிறோம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது? அதனால் டிஎன்பிஎஸ்சியை தடை செய்ய முடியுமா?" என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:சென்னையில் களைகட்டிய வானவில் சுயமரியாதை பேரணி.. தன்பாலின ஈர்ப்பாளர்களின் கோரிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details