திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (42). இவர் பாஜகவில் முன்னாள் விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்தவர். மேலும், மதுசூதனன் குடவாசல் அருகே உள்ள ஓகை என்கிற இடத்தில் அடகு கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கடைவாசலில் அவர் அமர்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் மதுசூதனனை தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மதுசூதனனை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
புகார் மனு:இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மதுசூதனனின் மனைவி ஹரிணி என்பவர் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “தனது கணவர் திருவாரூர் மாவட்ட பாஜகவில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருத்து பதிவிட்டு வந்தார். குறிப்பாக, மாவட்ட தலைவர் பாஸ்கருக்கு எதிரான கருத்துகளையும் அவர் பதிவு செய்திருந்தார். எனவே, மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக” அந்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன் ஜெகதீசன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட 9 பேரை குடவாசல் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கிணற்றில் கிடைத்த அந்த தடயம்...ஜெயக்குமார் வழக்கில் என்னதான் நடக்கிறது?