கரூர்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர் தொழில்பேட்டை, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் தன்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறி வாக்காளர்களின் காலில் வேட்பாளர் செந்தில்நாதன் விழுந்தார். தொடர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர், "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என ஏற்கனவே வெற்றி பெற்றவர்களின் நினைக்கிறார்கள்.
தொகுதியில் உள்ள மக்கள் கஷ்டங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அவர்களது குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை இம்முறை பொதுமக்களாகிய நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.