தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை.. திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை.. அண்ணாமலை திட்டவட்டம் - Annamalai - ANNAMALAI

K.Annamalai: பாஜக பொதுக்கூட்ட மேடையில் பேசிய அண்ணாமலை, "அரசியலில் மற்றவர்கள் காலில் விழுந்து பதவிக்கு வந்த எடப்பாடிக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை எனவும், தமிழகத்தில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் எப்போதும் உறவு கிடையாது; கூட்டணி இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது" எனவும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை
மு.க.ஸ்டாலின், அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 9:39 AM IST

சென்னை:"தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி, வி.பி துரைசாமி உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அண்ணாமலை, "2026-ல் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் பாஜக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவின் ஆட்சியை தமிழ்நாடு இதற்கு மேல் தாங்காது. 70 ஆண்டுகளாகத் தாய் தமிழகத்தை பாழ்படுத்தியுள்ளார்கள். காமராஜர், எம்ஜிஆரின் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாடு மோசமாகியுள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் ஒரு குடும்பத்துக்காக செயல்பட்டு வருகிறார்கள். துரைமுருகன் போன்ற மூத்தவர்கள் இருக்கும்போது உதயநிதி மேடைக்குச் சென்றுள்ளது திமுகவில் பதட்டத்தை ஏற்படுத்தும்.

முருகன் நிச்சயம் தண்டனை கொடுப்பார்: முதலமைச்சருக்கு பிறகு உதயநிதி வந்தால் மற்ற துறை அமைச்சர்கள் அவர்களுக்கு பிறகு அவர்களது மகன் அமைச்சராக வரலாம் என்பதற்காகவே உதயநிதியின் வரவை காத்திருக்கிறார்கள். இந்துக்களின் எழுச்சி தமிழ்நாட்டில் எழும்போது திமுகவினர் பழனிக்கு நோக்கி செல்வார்கள். முருகப்பெருமானை நன்றாக உணர்ந்தவன் நான். முருகப்பெருமான் அசாதாரணமான கடவுள். பழனி கோயிலில் அரசியலுக்காக கை வைத்தால் மண்ணோடு மண்ணாகப் போவார்கள்.

கடந்த ஆண்டு சனாதன தர்மத்தை வெட்டி எறிய வேண்டும் என சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி, சேகர்பாபு பேசிய நிலையில், இன்று முருகனின் பெயரை வைத்து அரசியல் காமெடி செய்து வருகிறார்கள். பழனியில் திமுகவினர் அரசியல் காமெடி செய்து வருகிறார்கள். திமுக கேவலமான நாடகத்தை பழனி மண்ணில் அரங்கேற்றி வருகிறார்கள். முருகனின் தண்டனை சாதாரணமாக வராது, அசாதாரணமாக வரும். தமிழ் கடவுள் முருகன் திமுகவுக்கு நிச்சயமாக தண்டனையை கொடுப்பார்.

தமிழ்நாடு மக்கள் முன்னால் பாஜக சொந்த பலத்தில் நிற்கிறது. திமுக, அதிமுக இருவரும் பாஜகவுக்கு எதிரிகள் தான். பிட்டிங் ஏஜென்ட் பார்ட்டியாக, டெண்டர் முறை விடும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளது. நேர்மை, நாணயத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூரில் நடந்தது அலங்கோலம்.

யாரையோ பிடித்து வந்தவர்தான் அண்ணாமலை என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பதில், தவழ்ந்து ஒருவரின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்து மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தைக் கொடுத்து நாற்காலியை காப்பாற்றியவர் என்னைப்பற்றி பேசக்கூடாது.

ஊழல்வாதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை: 2 திராவிட கட்சிகளையும் தூக்கி எறியவே பாஜகவில் தொண்டராக வந்தேன். இரண்டு திராவிட கட்சிகளும் நமக்கு பரம எதிரி, கொள்ளையடிப்பதைத் தவிர திமுக, அதிமுகவிற்கு அடிப்படை வித்தியாசம் வேறு ஒன்றும் இல்லை. மத்திய அமைச்சர் கலைஞர் நாணய வெளியிட்டு விழாவிற்கு வந்ததாலேயே நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கலைஞர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருக்கையில் பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்தார். ஆனால், தமிழ்நாட்டில் நம்பர் 1 ஊழல்வாதி கருணாநிதி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

திமுகவுடன் கூட்டணியா?:தமிழக மக்கள் முன்னால் மாற்று சக்தியாக பாஜக வளர்ந்துள்ளது. எப்போதும் பாஜகவுக்கும், திமுகவுக்கும் உறவு இருக்காது. கூட்டணி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. தேசிய கட்சி என்ற பெயருக்கே காங்கிரஸ் கட்சி தகுதியில்லை. காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை, அடிமைகள் தான் இருக்கிறார்கள். பாஜகவுக்கு 2026 அரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பை விட்டு விட்டால் இதுபோல வாய்ப்பு மீண்டும் எப்போது வரும் என்பது தெரியாது.

ஆகையால், பாஜக தொண்டர்கள் அடுத்த 500 நாட்கள் களத்தில் கடுமையாக வேலை பார்க்க வேண்டும். அரசியல் கட்சியாக இருக்கும், நாம் ஆளத் தகுதியான கட்சியாக மாற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மாமன்றம், பஞ்சாயத்து என எல்லா இடங்களிலும் பாஜக நிற்கும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தொண்டனும், தலைவனும் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுக் கட்சி பாஜக என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது:முதலமைச்சர் மீண்டும் அமெரிக்கா செல்கிறார். பிரதமர் மோடி உக்ரைன், ரஷ்யா என பல நாடுகளுக்கு செல்கிறார். அதனால். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றும், வெளிநாடுகளிலிருந்து பிரதமருக்கு 14 விருதுகள் கிடைத்துள்ளது. ஆகையால் நமக்கும் ஏதாவது விருதுகள் கிடைக்குமா? எனவும் முதலமைச்சருக்கு ஆசை.

முதலமைச்சரின் ஆசை என்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதை போல உள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் பாஜகவில் 1 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். ஆறாண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பாஜக உறுப்பினராக சேர உள்ளார். அன்றைய ஒரே நாளில் 10 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் சேர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "பல்லு போன நடிகர்கள் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை" - துரைமுருகன் நச் பதில்!

ABOUT THE AUTHOR

...view details