தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்: அத்துமீறும் திமுக அரசு என அண்ணாமலை விமர்சனம் - Gummidipoondi Youth set fire - GUMMIDIPOONDI YOUTH SET FIRE

Gummidipoondi Youth set fire: கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்ற வந்த அதிகாரிகள் முன்னிலையில், இளைஞர் தன் மீது தீ பற்ற வைத்துக்கொண்டு வெளியே ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளித்த இளைஞர்
தீக்குளித்த இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 1:29 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை நேதாஜி நகர் 2வது தெருவில் 50 ஆண்டுகளாக வசித்து வருபவர் கல்யாணி. இவரது கணவர் தினகரன். இவர்கள் இருவரும் 50 வருடங்களுக்கு முன் பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை கல்யாணி இதுவரையில் பாதுகாத்து வருகிறார்.

இதனிடையே கணவனை இழந்த கல்யாணி தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் நிலையில், கல்யாணியின் ஏழ்மையை அறிந்த ஒரு தம்பதியர் அவர்களுக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தை கல்யாணிக்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு சென்று வர இந்த இடத்தை கொடுக்குமாறும் மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இளைஞரின் விபரீத செயல் (Credits - ETV Bharat Tamil Nadu)

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் மனுவும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டாட்சியர் கண்ணன் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து, அந்த இடம் பட்டா இடம் எனவே நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இருதரப்புக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே இடத்தை முறையாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான கடிதம் கொடுத்துள்ளதாக கூறி வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார், இடத்தை காலி செய்வதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மின்வாரியத்துறையினர் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றியவாறு அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறி ஓடினார்.

அப்போது தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் ராஜ்குமாரின் உடல் 50 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், அவரை சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனங்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில், "திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V.G புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.

பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல்துறை. திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் திரு வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் திரு S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு.

கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கோயம்பேடு ஆம்னி பேருந்து தீ விபத்து: போலீசில் சிக்கிய நபர் சொன்ன திடுக் தகவல் - Koyambedu fire accident

ABOUT THE AUTHOR

...view details