மயிலாடுதுறை:கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி, “ஜெர்மனியைச் சேர்ந்த சீகன்பால்கு 222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து, 1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வந்தடைந்தார். சீகன்பால்கு தான் இந்தியாவில் முதல் தமிழ் பைபிளை காகிதத்தில் அச்சடித்து, 1715ஆம் ஆண்டில் வெளியிட்டவர்.
பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் பேட்டி (CREDITS- ETV Bharat Tamil Nadu) இதற்காக இந்தியாவில் முதல் முறையாக அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை தரங்கம்பாடியில் அமைத்தவர். மேலும், தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றியவர். தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டவர். இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்துள்ளார்.
ஆசியாவில் முதல் பள்ளிக்கூடம் அமைத்து அனைத்து மக்களுக்கும் சமமான கல்வியை போதித்தவர். விதவைகளை ஆசிரியர்களாக அமர்த்தி பெண்களுக்கான கல்விக்கூடம், விடுதி, தையற்பயிற்சி பள்ளிகளை நிறுவியவர். அதன் மூலம் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்” என தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து இறங்கிய 319ஆம் ஆண்டு நினைவு நாள் தரங்கம்பாடி கடற்கரையில் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், டி.இ.எல்.சி செயலர் தங்கபழம், துணைத் தலைவர் ஸ்டான்லி தேவக்குமார், உயர்நிலைக்கல்வி கழக தலைவர் பிஷப் ஜான்சன், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன் மற்றும் டி.இ.எல்.சி கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், திருச்சபையினர் ஆகியோர் சீகன்பால்கு கப்பலிலிருந்து வந்திறங்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சீகன்பால்கு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சீகன்பால்குவுக்கு தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களின் பல நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் மற்றும் கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு, கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றி. விரைவில் இதற்கானப் பணிகளை தமிழக அரசு தொடங்கும் என்று நம்புகிறோம். ஊரின் மையப் பகுதியில் அரசு இடம் உரிய வகையில் கிடைக்காவிட்டால், டி.இ.எல்.சிக்குச் சொந்தமான இடத்தை அளிக்க தயாராக இருக்கிறோம்.
மேலும், சீகன்பால்கு தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில் 1713ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்ட பைபிள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில், அதனை லண்டன் மியூசியத்தில் இருந்து மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். சீகன்பால்கு விட்டுச் சென்ற அரும்பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க:வீடு கட்டுமானத்தின் போது கிடைத்த சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தல்