சென்னை: சென்னை தெற்கு மண்டலம் கணினி சார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், நான் தினம்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் மொழி சைகைகளை வீடியோவாக பதிவு செய்து அந்த காணொளியை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற யூடிப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தெற்கு மண்டலம் கணினிசார் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS), தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பிரியாணி மேன் யூடியூப் சேனல் உரிமையாளர் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.