ராமேஸ்வரம்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் என்ற இளைஞர் தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
இந்நிலையில், சுவாமி தரிசனம் மேற்கொள்ள சென்ற அவர்களை, பேரிகார்டர் தாண்டி உள்ளே வந்ததாக கூறி அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இளைஞர் நிக்கிலுக்கு தமிழ் தெரியும் என்பதால் 'ஏன் இப்படி பேசுகிறீர்கள்' என கேட்டதாகவும், அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து பிரச்சனையை தீர்க்க முற்பட்டுள்ளனர். அப்போது, காவல்துறையினரிடம் கோயில் பணியாளர் தனது குடும்பத்தாரை தரக்குறைவாக பேசியதாக நிக்கில் தெரிவித்துள்ளார்.
அப்போது, இரு தரப்பினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. பணியில் இருந்த கோயில் பணியாளர் தாக்கியதில் இளைஞர் நிக்கிலுக்கு நெற்றி மற்றும் பின்னந்தலையில் ரத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, பின் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் சென்று சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து பணியில் இருந்த கோயில் பணியாளரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் தெரிவிக்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பினர் மீதும் தவறு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்தின் உடல் தகனம்!