ஈரோடு:ஈரோட்டில் மாயாறும், பவானி ஆறும் கூடுமிடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கு முக்கிய நீர்வரத்தாக உள்ளன. தென்மேற்கு மலைப்பகுதியில் மழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மலைப்பகுதி பந்தலூர், கூடலூரில் கனமழை பெய்து வருகிறது. இங்கு பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்து காட்டாறு வெள்ளமாக உருவெடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு 3 அடி உயரம் வரை இருந்த நிலையில் இன்று 7 அடி உயரம் வரை அதிகரித்துள்ளதால் தெங்குமரஹாடா கிராமத்துக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா கிராம மக்கள் சாகுபடி செய்த தக்காளி, வாழை, மிளகாய், வெங்காயம் முதலியவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று 3623 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 6872 கனஅடியாக அதிகரித்துள்ளது.