கோயம்புத்தூர்:வனத்தை ஒட்டி உள்ள பாரதியார் பல்கலைக்கழக பகுதியில் இன்று (மே 23) திடீரென புகுந்த காட்டு யானை ஒன்று, காவலாளிகளை விரட்டியதில் அதிர்ச்சியடைந்த காவலாளி சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வனப் பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைகள் மலை அடிவாரப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (மே 22) மருதமலை, சோமையம்பாளையம் பகுதியில் 13 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முட்புதரில் யானை நிற்பதாக காவலாளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவலாளிகள் சுரேஷ், சண்முகம் ஆகியோர் அங்கே சென்று யானையை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது திடீரென ஒற்றை ஆண் காட்டு யானை அவர்களை தாக்க முற்பட்டு விரட்டி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடியபோது கீழே விழுந்துள்ளனர். இதில் சண்முகம் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சுரேஷ் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.