சென்னை:சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக ஆம்னி பேருந்துகள், விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் இருந்து செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.
பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "பொதுமக்களின் நலன் கருதி சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட வேண்டும் எனவும், வட மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் மட்டும் கோயம்பேடு வரை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூடத்தில் SETC, MTC, TNSTC, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள், நெடுஞ்சாலை காவல்துறை, சென்னை மற்றும் தாம்பரம் நகரக் காவல் ஆணையரகங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொங்கல் விடுமுறைக்கு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர், டிசம்பர் 28 ஆம் தேதி, மாநில போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகள் சங்கத்திருடன் நடந்த கூட்டத்தில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குப் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது.