மதுரை:உலகமே வியக்கும் மிகப்பெரும் தொன்மை சிறப்பிற்குரிய ஓரிடமாக கீழடி மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள இந்த தொல்லியல் மேடு, இதுவரை 9 கட்ட அகழாய்வுகளை நிறைவு செய்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் இந்த இடம் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் தொடங்கப்பட்டது.
முதல் இரண்டு அகழாய்வுகளை அமர்நாத்தும், 3-ஆம் கட்ட அகழாய்வினை ஸ்ரீராமனும் மேற்கொண்டனர். அதற்குப் பிறகு 4-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி, தற்போது வரை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. பெருமைக்குரிய கீழடி அகழாய்வுக் களத்தை முதன் முதலில் கண்டறிந்ததுடன், அதனை உலகிற்கு அறிய தருவதற்காக பல்வேறு முயற்சிகளை 50 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டவருமான ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்தின் கையால்தான், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி முதன் முதலாக அங்கு குழி வெட்டப்பட்டு, அகழாய்வுப் பணிகள் துவங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்லியல் வட்டாரத்தால் அடையாளப்படுத்தப்பட்ட வை.பாலசுப்பிரமணியம், கடந்த 50 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்துள்ள அந்த காலகட்ட நினைவுகளை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக வழங்கினார். இது குறித்து அவர் நம்மிடையே பேசுகையில், “கடந்த 1973-ஆம் ஆண்டு கீழடியிலுள்ள அரசுப் பள்ளியில் நானும், எனது மனைவி சுபத்ராவும் முறையே வரலாறு மற்றும் அறிவியல் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். அப்போது மாணவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இருக்கக்கூடிய பழங்காலக் கோயில்கள், கட்டடங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிவித்தால் 10 மதிப்பெண்கள் தருவேன் என்று சொல்வது வழக்கம்.
1974-இல் கீழடியில் மண்டையோடு:அந்த சமயம் நான் கீழடிக்கு மாற்றலாகி வந்தபோது, 1974-இல் ஒரு மாணவர், அவரது வீட்டில் கிணறு தோண்டியபோது, அங்கே பெரிய பெரிய செங்கற்கள் உள்ளன என்று கூறினார். உடனே நான் மாணவர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கிருந்து ஒரு செங்கல், சிறு குவளை, மனிதத் தலையோடு கழுத்து வரையுள்ள ஒரு சுதை வடிவம், நாணயம், கருப்பு மணிகள், அதனோடு ஒரு மண்டை ஓடு இவற்றையெல்லாம் எடுத்து வந்தோம்.
அப்போது, ராமநாதபுரம் ஆட்சியருக்கு இந்தத் தகவலைக் கொண்டு போய் சேர்த்தேன். அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை. இந்தச் சூழலில்தான், கடந்த 1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக, மதுரை மகாலில் நடைபெற்ற பயிற்சியரங்கில் நான் கண்டெடுத்த பொருட்கள் பற்றி குறிப்பிட்டேன்.
இதனைப் பார்த்த தொல்லியல் துறையினர், இது சங்க காலத்தைச் சேர்ந்தது என்றனர். உடடினயாக இந்த விவரம் குறித்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தெரியப்படுத்தினோம், மறுநாள் அனைத்து நாளேடுகளிலும் 'மதுரை அருகே கொந்தகையில் சங்க கால தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு' என தலைப்புச் செய்தியாக வந்தது.
இதனையடுத்து, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 200க்கும் அதிகமான கிராமங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டோம். மதுரையில் புத்த மதமே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அச்சமயத்தில்தான், 1981-ஆம் ஆண்டில் திருப்புவனம் கால்வாயில் பெரிய புத்தர் சிலையைக் கண்டெடுத்து தொல்லியல் துறையில் ஒப்படைத்தோம். அது இன்றைக்கும் மகாலில் உள்ளது. சமணத்துடன் புத்தமும் மதுரையில் இருந்தது என்பதற்கான சான்றாக எங்களுடைய கண்டுபிடிப்பு அமைந்தது.
அமர்நாத் ராமகிருஷ்ணா வருகை:அதற்கு பிறகுதான் கடந்த 2013-2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை வைகை கரையோரம் ஆய்வினை மேற்கொள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் குழு ஒன்றை அனுப்பியது. நானும் அவர்களை அழைத்துக் கொண்டு கீழடிக்குச் சென்றேன். 1974 வாக்கில், நான் கண்டறிந்த அந்தப் பகுதி புஞ்சை மேடாக இருந்தது. ஆனால், 2014-இல் அந்த இடத்தை காணச் சென்றபோது, அவை அனைத்தும் தென்னந்தோப்பாக மாறிவிட்டன.