தேனி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி அழகர்சாமி தெருவைச் சேர்ந்த விஜயன் என்பவர் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் பொறியியல் துறை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பராசக்தி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று (மார்ச்.09) காலை 6:00 மணி அளவில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருடைய கணவர் விஜயன் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உடனடியாக விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்கப்பாண்டி மற்றும் மருத்துவ உதவியாளர் பூபதி, கர்ப்பிணி பராசக்தியை ஏற்றிக்கொண்டு போடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பராசக்திக்கு பிரசவ வலி அதிகரித்த நிலையில் மருத்துவரின் அறிவுறுத்தல் பேரில் மருத்துவ உதவியாளர் பூபதி உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டு ஆம்புலன்ஸில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவமனை சென்றடைவதற்குள் ஆம்புலன்ஸில் இருந்த பராசக்திக்குச் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் உடனடியாக பராசக்தியை மேல் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிறந்த குழந்தையுடன் பராசக்திக்கு போடி அரசு மருத்துவமனையில் தற்போது மேல் சிகிச்சை வழங்கப்படுகிறது.