தென்காசி:சிவகிரி வட்டத்திற்கு உட்பட்ட ராயகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். உடற்கல்வி ஆசிரியரான இவர் தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பணியை மேற்கொண்டு மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்கல்வியை கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, கரோனா தொற்று காலத்தில் தனது வேலையை இழந்த தர்மராஜ் குடும்ப வறுமையை போக்க சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்ட தொடங்கியுள்ளார். இதனால், அவரது உடற்கல்வி ஆசிரியர் பணி கேள்வி குறியாகியுள்ளது.
இந்நிலையில், அவர் உடற்கல்வி ஆசிரியராக இருந்தபோது அவரிடம் கற்ற மாணவர்களில் சிலர் காவல்துறை மற்றும் ராணுவ பணிகளுக்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்கள் உடல் திறனாய்வின்போது தோல்வி அடைவதாகவும், இதனால் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் ஆசிரியர் தர்மராஜிடம் கூறி வருந்தியுள்ளனர்.
இதனையடுத்து தர்மராஜ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அப்பகுதியில் செயல்படாமல் பாழடைந்து கிடந்த கட்டிடத்தை சுத்தம் செய்து உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளார். ஆட்டோ ஓட்டு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மாணவர்களை அழைத்து பயிற்சி அளித்துள்ளார்.
முதலில் குறைந்த அளவு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில், அம்மாணவர்களின் நண்பர்கள் சிலர் தங்களுக்கும் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி, உடற்பயிற்சி அளிப்பதற்கு கட்டணம் எதுவும் வாங்காமல் அவர்களுக்கும் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்க துவங்கியுள்ளார். இதுவரையில் அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போது வரை 8 பேர் காவல் துறைக்கும், 8 பேர் ராணுவத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பணியில் உள்ளனர்.