தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இப்படித்தான் துணி துவைக்கணுமா?" - மதுரை மாணவர்களிடம் வாழ்க்கைக் கல்வி கற்ற ஆஸ்திரேலிய மாணவர்கள்! - AUSTRALIAN STUDENT IN MADURAI

ஆஸ்திரேலியாவிலிருந்து கல்வி, பண்பாடு, அறிவு, அன்பு பரிமாற்றத்திற்காக மதுரை வந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள், தமிழக மாணவர்களிடமிருந்து துணிகளை கையால் துவைப்பது முதல் கட்டுமானப் பணிகள் வரை கற்றுக் கொண்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மாணவர்கள் துணி துவைக்கும் காட்சி
ஆஸ்திரேலிய மாணவர்கள் துணி துவைக்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 1:53 PM IST

Updated : Oct 9, 2024, 4:28 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் துவரிமான் அருகே உள்ள இளைஞர் நகர் (பாய்ஸ் டவுன்) பகுதியில் புனித தெலசால் தொழிற்கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை, எளிய மாணவர்களுக்காக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியன், வெல்டிங், ஃபிட்டர் உள்ளிட்ட தொழிற்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று செல்கின்றனர்.

அதாவது, பாய்ஸ் டவுன் அமைப்பிற்கு உலகமெங்கும் பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அந்நாடுகளில் பயிலும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக மதுரை மாவட்டம் துவரிமான் பாய்ஸ் டவுனுக்கு வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் ஓகில் கல்லூரியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 23 பேர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

துவரிமான் இளைஞர் நகர் வளாகத்திலுள்ள புனித தெலசால் தொழிற் பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களோடு 4 நாட்கள் தங்கி அவர்களோடு இணைந்து மரம் நடுதல், ஓவியம் வரைதல், நடனமாடுதல் உள்ளிட்ட கலை, கலாச்சாரப் பரிவர்த்தனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இதையும் படிங்க: சமஸ்தானம் முதல் மாநகராட்சி வரை.. புதுக்கோட்டை கடந்து வந்த பாதை!

அப்போது, புனித தெலசால் தொழிற் பயிற்சி மையத்தில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களது உடைகளைத் தாங்களே துவைப்பதைப் பார்த்து, அவர்களோடு ஆஸ்திரேலியா மாணவர்களும் பங்கேற்றனர். தொழில் பயிற்சி மைய மாணவர்கள், ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு "இப்படி தான் துணி துவைக்க வேண்டும்" துணிகளைத் துவைக்கும் முறை குறித்து அவர்களுக்குத் தெளிவாக விளக்கினர். அதைப் பின்பற்றி ஆஸ்திரேலிய மாணவர்களும் உற்சாகமாக துணி துவைத்து மகிழ்ந்தனர்.

மதுரை தொழிற்கல்வி நிலையத்தில் ஆஸ்திரேலிய மாணவர்கள் (Video Credits - ETV Bharat Tamilnadu)

துணி துவைத்தது நல்ல அனுபவம்: ஆஸ்திரேலியா மாணவர்கள் மோலி, ஃபுளோரியா, சைமன் மற்றும் அவர்களோடு வந்த ஆசிரியர் குளோரியா ரிச்சர்டு ஆகியோர் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்குச் சிறப்பு நேர்காணல் வழங்கினர். அப்போது, "இங்குள்ள மாணவர்களைப் பார்க்கும்போது எங்களுக்கு வியப்பாக உள்ளது. விளிம்புநிலைக் குடும்பங்களிலிருந்து வந்து இங்கு தொழிற்கல்வி பயில்கின்றனர். அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

எங்களது கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியரெல்லாம் இணைந்து சேமிப்புச் செய்த தொகையை இங்கே வகுப்பறை, கூட்ட அரங்கம், தேவாலயம், சாலை சீரமைப்புப் பணிகளுக்காகச் செலவு செய்ததுடன், நாங்களே அதன் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டோம். அது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. குறிப்பாக, இந்த மாணவர்கள் தங்களது உடைகளைத் தாங்களே துவைத்து, உலர்த்தி அணிவது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதையடுத்து அவர்களோடு இணைந்து நாங்களும் எங்களது துணிகளைத் துவைத்தோம்.

காய்கறிச் சந்தைக்குச் சென்று நாங்களே காய்கறிகள் வாங்கியதும் நல்ல அனுபவம். ஆடல், பாடல் என மிகக் கொண்டாட்டமாய் அமைந்தது. எங்கள் நாட்டில் எங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தாலும்கூட, இதுபோன்ற மகிழ்ச்சியை நாங்கள் அங்கு பெற முடியாது. அந்த வகையில் இந்த பயணம் எங்களுக்கு மிக இனிமையாகவும், அனுபவம் மிக்கதாகவும் அமைந்தது" என்று தெரிவித்தனர்.

ஒழுக்கமே எங்கள் நோக்கம்: அதையடுத்து பேசிய இளைஞர் நகர் நிர்வாகியும், புனித தெலசால் தொழிற் பயிற்சிப் பள்ளியின் தாளாளருமான அருட்சகோதரர் இனிகோ அமலன், "தெலசால் அருட்சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உலகம் முழுவதும் 82 நாடுகளில் இயங்கி வருகிறது. ஏழை, எளிய இளைஞர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவே செயல்பட்டு வரும் அமைப்பு இது. தரமான, ஒழுக்கமான, வாழ்வியல் சார்ந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதே எங்களின் நோக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள எங்களது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரும் இங்கே வருகை தந்து அனுபவங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரிலுள்ள ஓகில் கல்லூரியிலிருந்து வருகை தந்த மாணவ, மாணவியர் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் சூராணத்திற்கும் சென்ற ஆஸ்திரேலிய மாணவர்கள், அங்குள்ள தேவாலய புனரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். பின்னர் உள்ளூர் மக்களோடு கலந்து பழகி, அவர்களது அன்றாட வாழ்க்கை முறை குறித்தும் அறிந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 9, 2024, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details