சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள உதவி மருத்துவப் பணியிடங்களில் 2,642 மருத்துவர்கள் MRB மூலம் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது. 2,553 மருத்துவர்களை நியமிப்பதற்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க கூடுதலாக 89 காலியிடங்களும் அறியப்பட்டது.
மொத்தமாக 2,642 மருத்துவ காலிப்பணியிடங்களுக்கு தேர்வு முடிவுற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர், 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான சான்றிதழை பதிவு செய்து, மருத்துவராக பணிபுரிவதற்கான உரிமத்தை 2024 ஜூலை 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெறாததால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சாய் கணேஷ், "மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,642 பணியிடங்களுக்கு ஜனவரி மாதம் 5ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியதன் அடிப்படையில், 14,855 மருத்துவர்கள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்களில், 4,585 மருத்துவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இவர்களில் 400 பேர் 2018ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தவர்கள். நாங்கள் 2024 ஜூலை 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப்பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்தும் கிடைக்காத நிலையில், தற்காலிக சான்றிதழை வைத்து விண்ணப்பம் செய்தோம்.