சென்னை:சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ஜூன் 5ஆம் தேதி இரவு 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக, 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பிஎஸ்பி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டு சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சடங்குகள் முடிக்கப்பட்டு, குடும்பத்தார் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது. அதன் பிறகு செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கொலை நிகழ்ந்த 4 மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் விசாரிக்க போலீஸ் காவல் கேட்க உள்ளோம்.
விசாரணை செய்து சரியான ஆதாரங்கள் அடிப்படையில் தான் சரியான நபர்களை கைது செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் சட்டப்படி கைது செய்துள்ளோம். சிசிடிவி மட்டுமின்றி ஆதாரங்களும் கைப்பற்றி முறைப்படி கைது செய்துள்ளோம். இதுவரை 7 அரிவாள்கள், 3 பைக்குகள் கைப்பற்றியுள்ளோம்.