தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"முதல் வேலை ரயில் நிலையம் கொண்டு வருவோம்" - பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு! - Perambalur dmk candidate - PERAMBALUR DMK CANDIDATE

Perambalur DMK candidate: நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் வேலையாகப் பெரம்பலூர் தொகுதிக்கு ரயில் நிலையத்தைக் கொண்டு வருவோம். அதற்காக அரசை வலியுறுத்துவோம் என்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அருண் நேரு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அருண் நேரு அறிவிப்பு
பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அருண் நேரு அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 2:11 PM IST

"முதல் வேலை ரயில் நிலையம் கொண்டு வருவோம்" - பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு!

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நேற்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள திமுக வேட்பாளர் பட்டியலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அருண் நேரு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனான இவர், இதுவரை கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை, நேரடி அரசியலிலும் ஈடுபட்டதில்லை. இந்நிலையில், அவர் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக, திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் மேளதாளம் முழங்க, பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அருண் நேரு கூறியதாவது, “பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் என்னை அறிவித்துள்ளனர். மத்திய அரசாங்கமும், சுற்றி இருக்கக்கூடிய அரசாங்கமும், தமிழ்நாடு திராவிட மாடலை பார்த்துப் பொறாமைப்பட்டு, நிறையச் செயல்களை இங்கு செய்து வருகின்றனர்.

வருகின்ற தேர்தல், மக்களின் உரிமையைக் காப்பதற்கும், தமிழகத்திற்கு வரவேண்டிய எல்லா வளங்களும் வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாக எனக்குக் கொடுத்துள்ளனர். அனைத்து இளைஞர்கள் சார்பாக நான் போட்டியிடுவதில் பெருமைப் படுகிறேன். இளைஞர்கள் நினைப்பதை நான் கண்டிப்பாகச் சாதிப்பேன் என்றார்.

முழுமையான அறிக்கை: தொடர்ந்து பேசிய அவர், நாளை நமதே நாற்பதும் நமதே என்று துவங்கியுள்ளோம். எந்தெந்த தொகுதிகளில் என்னென்ன வேலைகள் குறித்து முழுமையான அறிக்கையை நாளை வெளியிடுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. அவை முடிந்தவுடன், அறிக்கை ஒவ்வொரு இடமும் கொடுக்கப்படும்.

பெரம்பலூர் தொகுதி எம்பியானால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை:

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ரயில் சேவை கொண்டுவர இயலாமல் உள்ளது. எனவே, வெற்றி பெற்றவுடன், முதல் வேலையாகப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ரயில் நிலையத்தைக் கொண்டு வருவோம். அதற்காக அரசை வலியுறுத்துவோம். முக்கியமாகச் சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை கொண்டு வருவோம். சுகாதாரத்தில் என்னென்ன திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் என்ன திட்டங்கள் குறித்து முழுமையான அறிக்கையை நாளை கொடுக்க உள்ளோம்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் திமுக அறிக்கையிலிருந்த அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இவரது வருகையின் காரணமாகத் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு ஏப்.13 முதல் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Tamil Nadu Schools Summer Holiday

ABOUT THE AUTHOR

...view details