சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான 2 கோடியே 50 லட்சம் பாடப்புத்தகம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தினால் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகமும் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் வட்டாரக் கல்வி ஒன்றியங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை வட்டாரக் கல்வி ஒன்றியங்களில் இருந்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வாகனப் போக்குவரத்துச் செலவிற்காக ஒரு கோடியே 33 லட்சம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.