மதுரை:மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய வளங்களில் ஒன்றாகக் கருதப்படும் அரிட்டாபட்டி மலைத்தொடரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தமிழக அரசால் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கக் காரணமாக இருந்தவர் அரிட்டாபட்டி ரவிச்சந்திரன். இவர் இன்று காலையில் காலமானார். இவருக்கு வயது 44.
யார் இந்த அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்?: மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன்(44). இவர் சுற்றுச்சூழலில் அதிக நாட்டம் கொண்டு இயங்கி வந்தார். மேலும், இயற்கை வளங்களைக் காக்கும் அவரின் சமூக செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
ரவிச்சந்திரன் செயல்கள்:அரிட்டாபட்டி மலைகள் கிரானைட் குவாரியாகும் அறிவிப்பு வந்த காலந்தொட்டு ஊர் மக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியவர், நீதிமன்றம் சென்று அரிட்டாபட்டி மலைகளை உடைக்கும் குவாரிக்கு தடையாணை பெற்றார். ஏழுமலை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தொடர்ந்து அரிட்டாபட்டி மலைகளைப் பாதுகாக்கும் பணியை செய்து கொண்டே வந்தவர்.
அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu) அரிட்டாபட்டி மலை பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட காரணம்: கடந்த 2014ஆம் ஆண்டு கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க சகாயம் இ.ஆ.ப தலைமையில் ஆய்வுக்குழுவை நீதிமன்றம் நியமித்தது. அப்போது 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் போராளி முகிலன் தலைமையில் 'சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்' என்ற பெயரில் இயக்கம் உருவாக்கி, கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட மேலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து, கிரானைட் குவாரிகளால் மக்கள் அடைந்த இழப்புகளை புகாராக எழுதி சகாயம் குழுவினரிடம் வழங்கினார்.
கிரானைட் முதலாளிகளுக்கு அஞ்சி புகாரளிக்காமல் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை அளித்தவர். கிரானைட் குவாரிகள் ரத்து செய்யப்பட்டதும், அரிட்டாபட்டியில் உள்ள பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், பாம்புகள், நாட்டு மீன்கள் ஆகியவற்றை ஆவணமாக்கும் பணியைத் தீவிரமாக செய்து வந்தார். அந்த ஆவணங்களைக் கொண்டு பல்வேறு அரசு அலுவலகர்களை சந்தித்தார். அவரது தொடர் முயற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் மரபு தளமாக அரிட்டாபட்டி மலைகள் அறிவிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தார். அதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அரிட்டாபட்டி ரவிச்சந்திரனாக அழைக்கப்பட்டார்.
கலைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரர்: அரிட்டாபட்டி மலைகளில் உள்ள சமணர் படுகை, தமிழிக் கல்வெட்டு, ஆனைகொண்டான் கண்மாய் மடை கல்வெட்டு, இலக்கிய தரவுகள், பல்லுயிரிய தரவுகள் என அங்குலம் அங்குலமாக அம்மலைகளை அறிந்தவர். அரிட்டாபட்டியில் நடைபெறும் கோயில் திருவிழாவில் நிகழும் ஆண்கள் கும்மிப்பாட்டு என்னும் நிகழ்த்து கலைக்கு சொந்தக்காரர். அடிப்படையில் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்தவர்.
ஊரில் உள்ள இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை சொல்லித்தரும் ஆசானாக விளங்கியவர். கயல் நாட்டு மீன்கள் நடுவம் என்ற அமைப்பின் வழி மதுரை மாவட்டத்தில் உள்ள நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள், கருவிகள் குறித்து ஆய்வு செய்தவர். அரிட்டாபட்டியின் பறவைகள் குறித்து நூலை எழுதிய எழுத்தாளர். விகடன் நம்பிக்கை மனிதர்கள் விருது, கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பசுமையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் காலமானார்: திடீர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் உடனடியாக அவரது சொந்த ஊரான அரிட்டாபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பிறகு ஐந்து மணி அளவில் அவர் உடல் எரியூட்டப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஜஅரிட்டாபட்டி ரவிச்சந்திரனின் இறப்பு பெரும் வேதனையையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது!