ஈரோடு:தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, டிவி ஷோ நடத்துகிறீர்களா? முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதே தவறு என வட்டாட்சியர் கூறியதால், வட்டாட்சியர் மற்றும் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தாளவாடி வனப்பகுதி எல்லை முழுவதும் பழைய ரயில்வே தண்டவாளத்தின் வேலி அமைக்கும் பணியை வனத்துறை தொடங்க வேண்டும். அதேபோல், தமிழக - கர்நாடக எல்லையான ராமாபுரத்தில் கர்நாடக அரசு ரயில்வே தண்டவாள வேலி அமைக்க வலியுறுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க நெய்தாளபுரம், தலமலை, மாவள்ளம், குழியாடா ஆகிய வனக் கிராமங்களில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்க வேண்டும். முதியனூரில் யானை தாக்கி உயிரிழந்த சிக்குராமன் குடும்பத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ரூ.15 லட்சம் நிவாரணத்தை உடனே வழங்குவது மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருக்கு வனத்துறையில் வேலை வழங்க வேண்டும்.
மனித - விலங்கு மோதலில் உயிரிழக்கும் மக்களுக்கு கர்நாடகத்தில் வழங்குவது போல, தமிழக வனத்துறை இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தாளவாடி மலைப்பகுதி மக்கள் 24 மணி நேரம் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க உடனடியாக பாஸ் வழங்க வேண்டும். தாளவாடி மலைப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது. தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்யும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.