சென்னை:சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்புக்கு மே 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் பி எஸ் பட்டப்படிப்பில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் (BS in Data Science and Applications & Electronic Systems) 4 ஆண்டு பிஎஸ் படிப்புகளுக்கு மே 26ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இரு படிப்புகளும் சென்னை ஐஐடியில் பட்டம்பெற விரும்பும் எவரும் அணுகக்கூடிய, குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வியை வழங்குகின்றன. டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளாகும். அத்துடன், பல்லாண்டுகள் மென்மேலும் வளர்ச்சி காணக்கூடியவை என எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் சிப்கள் தயாரிப்பில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், இத்துறை மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்-ன் பிஎஸ் படிப்பானது, இத்தொழிலுக்கு தேவைப்படும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு உரிய வகையில் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதியதாக சேர உள்ள பிரிவிற்கு மே 26ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (JEE) எழுதாமலேயே சுயமாக தகுதிபெறும்
நடைமுறை மூலம் இப்பாடத்திட்டத்தில் சேர முடியும். இரண்டாவதாக, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 அல்லது 2024 தேர்வுகளில் பங்கேற்ற தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேரடி சேர்க்கையாகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிஎஸ் பாடத்திட்டம் குறித்து டேட்டா சயின்ஸ் படிப்பின் பொறுப்பு பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறும்போது, “தரவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், திறமையான தரவு விஞ்ஞானிகளுக்கான தேவையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி கண்காணிப்புடன் நடத்தப்படும் தேர்வுகளை ஆன்லைன் கற்றலுடன் ஒருங்கிணைப்பதன் மூலமாக, மாணவர்களுக்கு வசதியான மற்றும் விரிவான கற்றல் அனுபவத்தை கிடைக்கச் செய்கிறது. அத்துடன், ஆன்லைன் கற்றல் மூலம் கிடைக்கும் திறன்களையும், கற்றறிவையும் மதிப்பிட முடிகிறது. எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, கோட்பாடு வகுப்புகள் மற்றும் ஆய்வகப் படிப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
மாணவர்கள் பரிசோதனைகளை தங்கள் வீட்டிலேயே செய்து, அதன் முடிவுகளையும் அறிந்துகொள்ளும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. இறுதிகட்ட மதிப்பீட்டிற்காக மாணவர்கள் சென்னை ஐஐடி வளாகத்திற்கு வருகைதர வேண்டியிருக்கும். ஸ்மார்ட்போன்கள், கணினிகள் தொடங்கி மருத்துவ சாதனங்கள், வாகன அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்கள் பயன்பாட்டில் உள்ளன.
எலெக்ட்ரானிக், தகவல் தொடர்பு அமைப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் சோதனை செய்வதில் ஆர்வமுள்ள மாணவர்கள், இப்படிப்பை படிப்பதன் மூலம் அண்மைக்கால தொழில்நுட்பங்கள், அவற்றின் போக்குகள் குறித்த திறன்களைப் பெற்றிருக்க முடியும். இது தொடர்பான வேலைகளுக்கும் அவர்கள் தயாராகி விடுகின்றனர்.
பொறியியல், மானுடவியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், 12ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் பிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்படிப்பிற்கான தகுதித் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள், அடிப்படை நிலைக்காக முதல் 4 பாடங்களை நான்கு வாரங்களில் படிக்க வேண்டியிருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடிப்படை நிலையில் சேர அனுமதிக்கப்படுவார். தற்போது, இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
பாடங்கள் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படும். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தேர்வு
மையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதந்தோறும் நேரடித் தேர்வு நடைபெறும். இதனால் பணிபுரியும் வல்லுநர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் வழக்கமான பணிகள் மற்றும் பட்டப்படிப்புடன் இதனைத் தொடர முடியும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி! - Ponmudi Take Oath