ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பதிவறை, கம்ப்யூட்டர் அறை மற்றும் தரகர்களிடமிருந்து பறிமுதல் என கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவலும் சென்றது.
அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன், மாவட்ட ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகன் தலைமையில், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.