மதுரை: கீழ் மதுரை ரயில் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ரயில் பயணிகளின் வசதிக்காக மேலும் சில வசதிகளை செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "கீழ் மதுரை ரயில் நிலையம் என்பது மதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதையில் மதுரைக்கு அருகே காமராஜபுரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில், ரயில் நின்று செல்லும் வகையில் ஒரு ரயில் பாதை மற்றும் ஒரு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு பயண சீட்டு கொடுப்பதற்கு ஒரு பயணச்சீட்டு அலுவலர் பணியாற்றி வருகிறார்.
அத்தியாவசிய வசதிகள்: தினந்தோறும் வெளியூர் செல்வதற்கு மற்றும் கீழ் மதுரைக்கு வருவதற்கு என சராசரியாக 300 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, தினசரி முன்பதிவில்லாத பயண சீட்டு வருமானமாக மட்டுமே ரூ.6 ஆயிரத்து 577 வசூலாகிறது. மேலும், இந்த ரயில் நிலையத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து செல்லும் ரயில்களுக்கு இங்கு பயண சீட்டு பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் தினந்தோறும் சராசரியாக ரூ.45 ஆயிரத்து 797 வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் குறைந்த உயரம் உள்ள நடைமேடை 420 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அளவில் ஒரு ரயில் பெட்டி நீளத்திற்கு நடைமேடை மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை, குடிநீர் வசதி, மின்னணு கடிகாரம் போன்ற அத்தியாவசிய வசதிகளும் உள்ளன.
ஒலிபெருக்கி வசதி: தற்போது இந்த ரயில் நிலையத்தில் ரயில் வருகை, புறப்பாடு, விழிப்புணர்வு செய்திகள் ஆகியவற்றை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் தானியங்கி பொது அறிவிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆறு ஒலிபெருக்கி கருவிகள் நடைமேடையில் பொருத்தப்பட்டுள்ளன. ஒலிவாங்கி, கணிப்பொறி போன்ற சாதனனங்களுடன் ரூ.4 லட்சம் செலவில் இந்த பொது அறிவிப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பொது அறிவிப்புகள் தானியங்கி ஒலிபரப்பாகும். பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறி, இறங்க ரூ.68 லட்சம் செலவில் ரயில் பெட்டி வாசல் உயரத்திற்கு நடைமேடை உயர்த்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. பரிசீலனை முடிந்தவுடன் விரைவில் பணிகள் துவங்க இருக்கிறது" என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் இரவு பகலாக நடைபெறும் 'அக்னிபாத்' ஆட்சேர்ப்பு முகாம்!