வேலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையில் உரையாற்றிய அண்ணாமலை வேலூர்:'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை என்ற தலைப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடெங்கும் நடைபயணம் மேற்கொண்டு, பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வருகிறார். இந்நிலையில், அண்ணாமலை நேற்று (பிப்.2) வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக கூட்டத்தில் பேசிய அவர், 'தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி விட்ட அறிக்கையின் பதில் அளித்த அண்ணாமலை கள்ளு இறக்குவார், மாநிலத் தலைவர் அண்ணாமலை பருகுவார் என்று சொல்லி இருக்கிறார்.
ஒரு பத்திரிகையாளரும் என்னை கள் குடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு நான் குடிக்க மாட்டேன் என்றேன். ஆனால், இன்றைக்கு நான் கள்ளை குடித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கு. ஏனென்றால், மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சொன்னதைச் செய்யும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் கட்டாயம் எனக்குள்ளது. அதனால், அந்த முதல் கள்ளை நான் குடித்துதான் ஆகணும். எனக்கு அது பிடித்து இருக்கா இல்லை பிடிக்கலையா என்பது இரண்டாவதுதான். கள் இயக்கத்தினர் இறக்கும் முதல் கல்லை குடித்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அண்ணாமலை, 'இவையெல்லாம் மக்களுக்கு தெரியணும், விவசாயப் பெருமக்களுக்கு தெரியணும். இவர்கள் சொன்னால் செய்வார்கள். மைக் இருக்குன்னு பேசவில்லை, இவர்கள் திட்டமிட்டு ஆழ்ந்த அறிவோடு, நுணுக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சி ஒரு விஷயத்தைப் பேசுவதற்கு முன்பு யோசித்து பேசும்' எனப் பேசியுள்ளார்.
'2024 நாடாளுமன்றத் தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் சுயசார்பு நாடாக நம் நாடு மாறியுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆட்சியாக, தமிழ்நாட்டின் திமுக ஆட்சி உள்ளது. மத்திய அரசு தரமான கல்வி வழங்க நவோதயா பள்ளிகளைத் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று கூறுகின்றனர்.
ஐந்து மொழி கல்விக் கொள்கை: 'நவோதயா' (Jawahar Navodaya Vidyalaya) என்ற பெயர் வேண்டாம் என்றாலும் கூட, 'காமராஜர் பள்ளிகள்' என்று பெயர் மாற்றி செயல்படுத்தக் கூட மத்திய அரசு தயாராக இருப்பினும், தமிழக அரசினர் தரமான பள்ளிகள் அமைவதை தடுக்கின்றனர். உலக அளவில் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம்.
எனவே, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, அனைத்து பள்ளிகளிலும் 'ஐந்து மொழி கல்விக் கொள்கை' கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தாய்மொழி முக்கியம், ஆங்கிலக் கல்வி மற்றும் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
உலக அளவில் இந்தியா வணிகத் தளமாக மாற இருப்பதால், இதற்கு இளைஞர்களுக்கு பல்வேறு மொழிகள் கற்றுக்கொள்வது அவசியமாக உள்ளது. இதற்கு திராவிடக் கட்சிகள் எதிராக செயல்படுகின்றன. பாஜக ஆட்சி அமைந்த உடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக அகற்றப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவின் ஊழல் ஆட்சியால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது' எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:“அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும் அதிமுகவும் சளைத்தவையல்ல” - மு.க.ஸ்டாலின்