சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்தான இறுதிகட்ட பேச்சு வார்த்தை இன்று, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒரு மகிழ்ச்சியான செய்தி நமது தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது. 39 தொகுதிக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.
பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் 20 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகிறார்கள். 4 தொகுதியில் தாமரை சின்னத்தில் ஒட்டுமொத்தமாக 24 பேர் களம் காண்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்கள் அவர்களுக்கான தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை தனியாக அறிவிப்பார்கள். எல்லோருக்கும் மரியாதை வழங்க வேண்டும், எல்லோரும் வளர வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பார்” என்றார்.
இதையும் படிங்க:தேனியில் நேருக்குநேர் மோதும் டிடிவி தினகரன் - உதயநிதி ஸ்டாலின்! - TTV Vs Udhayanidhi