சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, தமக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறிய தகவல்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு கிடைத்தது.
பாதிக்கப்பட்ட மாணவி கூறியது குறித்து நம்மிடம் பேசிய உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், "பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 23ஆம் தேதி இரவு 7:45 மணிக்கு அவரது ஆண் நண்பருடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்மநபர், ஆண் நண்பரை மிரட்டி அணுப்பிவிட்டு மாணவியை வலு கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவம் நடந்த இரவு முழுவதும் மாணவி அவர் தங்கியிருந்த விடுதி அறையில் அழுதபடியே இருந்திருக்கிறார். உடன் இருந்த தோழிகள் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் மாணவி புகார் கொடுக்க முன் வந்தார்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி 24 ஆம் தேதி காலை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரைப் பெற்றுக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதே பாணியில் இதற்கு முன்பு அந்த பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் கைதான குற்றவாளிகளை பிடித்து விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஞானசேகரனிடம் காவலர்கள் விசாரணை செய்தனர். காவலர்கள் அழைத்தவுடன் ஞானசேகரன் தனது செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்களை அழித்துவிட்டு காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது காவலர்கள் அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமான படங்கள், தகவல்கள் எதுவும் இல்லாததால், அவரை திருப்பி அனுப்பி உள்ளனர்.