அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி: மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை தலைமை பதி குருமார்கள், சாமி ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். சாமி தரிசனம் முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவும், தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்கவும் வேண்டி சாமி தரிசனம் செய்தேன்.
தமிழிசை சௌந்தரராஜன் ஆளூநர் பதவியை ராஜினாமா செய்தது அவர் தலையெழுத்து, தூத்துக்குடி தொகுதியில் அவர் போட்டியிட்டால் என்னவாகும் என்பது அவர்களுக்கே தெரியும். தமிழிசை, விஷயம் தெரியாமல் களத்தில் இறங்குகிறார், தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் துணை குடியரசுத் தலைவர் பதவி தருவார்கள் என அவர் நினைக்கலாம். ஆனால், அடுத்து அமையப்போவது இந்தியா கூட்டணி ஆட்சி என்பது நினைவில் இருக்கட்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களைத் தொடர்ந்து சிறை பிடிக்கிறார்கள், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தும், பிரதமருக்கு கடிதம் எழுதியும், உடனடியாக அந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வகையில் அறிக்கை விடுகிறார்.
இதனால் மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள், ஆனால் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பாஜக அமைச்சர்கள் ராமேஸ்வரத்திற்கு வரும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்டுத் தருவதாகவும், படகுகளை மீட்டுத் தருவதாகவும் பேச்சளவில் மட்டும் கூறுகிறார்கள்.
இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் போது, நிச்சயமாக எந்த மீனவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசோடு பேசி, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். மேலும், இந்திய நாடு என்பது கூட்டமைப்பு, யாரும் அதிகாரத்தை வேண்டியது இல்லை. அப்படியென்றால், ஏன் மருத்துவமனையைக் கட்டிக் கொடுக்க வேண்டியது தானே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ஆனால், இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. வெளிநாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை பாஜக அரசு காப்பாற்றியதாகக் கூறும் பிரதமர், அதனை புள்ளி விவரத்தோடு தந்தால் பதில் கொடுக்கலாம். தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு கடற்கரை பகுதியிலும் ஆம்புலன்ஸ் படகு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பெண்களுக்கு விரோதி கட்சி திமுக.. தமிழில் பேச முடியாதது வருத்தம்.. குமரி கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன?