தஞ்சாவூர்: ஆந்திரா மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பிரபலமான கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வரிசையில் இன்று காலை தஞ்சாவூரில் இருந்து காரில் புறப்பட்டு, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தனது மகன் ஆதிரா நந்தன் மற்றும் நண்பர் ஆனந்த்துடன் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை தந்தார். அக்கோயிலில் சுவாமிநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து, தரிசனம் செய்தார்.
டிகிரி காபி குடித்த பவன் கல்யாண்: இதனைத்தொடர்ந்து கோயில் வசந்த மண்டபத்தில் அமர்ந்து கந்தசஷ்டி கவசத்தை பாடியும், அதனை முழுமையாக பாடக் கேட்டும், பிராத்தனை செய்தார். பின்னர் சுவாமிமலை தெற்கு சன்னதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று, கும்பகோணம் டிகிரி காபியை வாங்கி ருசித்தார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட ஆந்திரா மாநில மக்கள், தெலுங்கு பேசும் சமூகத்தினர் மற்றும் தமிழ் மக்கள் என அனைவரும் அவரை நலம் விசாரித்தும், அவருடன் கை குலுங்கியும் மகிழ்ந்தனர். சுவாமிமலை கோயிலுக்கு வருகை தந்த ஆந்திரா துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு கோயில் சார்பில் கோயில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோயில் அர்ச்சகர் சிறப்பான வரவேற்பளித்தனர்.
ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்: இதனைத்தொடர்ந்து மகாமகம் தொடர்புடைய முதன்மை சைவத்தலமாக விளங்கும் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலுக்கு பவன் கல்யாண் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பவன் கல்யாண் கோயில் யானை மங்களத்திற்கு செவ்வாழை பழங்கள் வழங்கினார். அப்போது கும்பகோணம் விஜயயேந்திர மடத்தின் சார்பில், அவருக்கு பிரசாதம் வழங்கி, வெற்றி சின்னமாக கதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கும்பேஸ்வரரை வழிபட்ட பின், மங்களாம்பிகை சன்னதிக்கும் சென்று வழிபட்டார்.