சென்னை: கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார். இதனால் அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவித்த உடனேயே திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி மருத்துவர் அபிநயாவை வேட்பாளராக அறிவித்தது.
நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் 2ம் இடம், 3 ஆம் இடம் என பிடித்த பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் காலமான புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும் போட்டியிட்டனர். அந்த தேர்தல் முடிவில் திமுக 93730 வாக்குகளும், அதிமுக 84157 வாக்குகளும் பெற்றன. இறுதியில், 9573 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. வாக்கு சதவீதத்தின்படி, திமுகவுக்கு 48.41%, அதிமுகவுக்கு 43.47% சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக 4.94 % வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது.
மேலும், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளாக வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க 72,188 வாக்குகளையும், அ.தி.மு.க 65,825 வாக்குகளையும், பா.ம.க 32,198 வாக்குகளையும் பெற்றது.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை வைத்துள்ள அதிமுக, திமுகவிற்கு மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இடைத்தேர்தலில், பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் '' திமுக அரசு வெற்றிக்காக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அராஜகங்களிலும், வன்முறைகளில் ஈடுபடும்'' என குற்றம்சாட்டி தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைப்பெறாது என கூறி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் கூறுகையில், '' பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் என்றும் இது மேலிடத்தில் இருந்து உத்தரவு என்பதற்கான சான்று'' எனவும் கூறினார்.