புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களிடையே மிக பரிச்சயமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்து வருபவர் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அரசியல் ரோல் மாடலாக கொண்டிருக்கும் ரங்கசாமி தனது தோற்றத்தையும் காமராஜரை போலவே பாவித்துக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர் ரங்கசாமி. கர்ம வீரர் காமராஜரை பின்பற்றுபவராக இளம் வயதிலேயே ரங்கசாமி காமராஜருக்காக மன்றம் நிறுவியுள்ளார். மேலும் இவர் நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகரும் கூட.
சிசிடிவி காட்சியின் புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu) புதுச்சேரியில் மாணவர்களுக்கு காலை நேரத்தில் ரொட்டி பால் வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை உயர்வு, புதுச்சேரியின் முக்கிய ஆலைகளை இயக்கியது, விவசாயிகளுக்காக திட்டங்களை அமல்படுத்தியது, பேரிடர் கால நிவாரணங்களை வழங்கியது என இவர் செய்த நலத்திட்டங்களால் மக்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:"அரசியல் தலைவர்கள் குறித்து சீமான் நிதானமாக பேச வேண்டும்"-சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
ரங்கசாமியின் பிறந்த நாள் என்றால் புதுச்சேரி நகரம் முழுவதும் பேனர்களுக்கு பஞ்சமிருக்காது. புதுச்சேரி மக்கள் கட்சி, கொள்கை, சின்னம் என அனைத்தையும் கடந்து பரிச்சயமான முகத்தை பார்த்து தேர்தலில் வாக்களிப்பது வழக்கம். அதற்கு ஒரு உதாரணம் ரங்கசாமி என்கின்றனர் அவருக்கு ஆதரவான புதுச்சேரி மக்கள்.
புதுச்சேரியில் தனது ஆதரவாளர்களிடையே எளிமையான முதலமைச்சர் என்று நேசிக்கப்படும் ரங்கசாமி மீது அளப்பற்ற மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி நகரில் நெடுஞ்சாலையில் உள்ள சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சர் ரங்கசாமியின் பேனரை பார்த்து, கையெடுத்து கும்பிட்டு விட்டு தினமும் பால் வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.