கோவையில் மதம் மாற்றத்திற்கு வற்புறுத்தி இளைஞர் துன்புறுத்தல் கோயம்புத்தூர்: கோவை மருதமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்குச் சென்ற இடத்தில் மதம் மாற சொல்லிச் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், "நான் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் படித்துள்ளேன். கடந்த 2021 ஆம் ஆண்டு எங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் வினியா என்பவர் இடம் வாங்கிய நிலையில், அவர் எனது குடும்ப சூழலை பார்த்து அவரது நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறினார். இதனையடுத்து நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தினார்.
அப்போது அவர் என்னை அடித்து துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதையடுத்து மருத்துவ சிகிச்சைக்குக்கூட என்னை அனுமதிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக எவ்வித சம்பளமும் தராமல் வேலை வாங்கி துன்புறுத்தி வந்ததார். மேலும் என்னுடைய கல்லூரிச் சான்றிதழ்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டார்.
சம்பளத்தை கேட்டால் என்னை அவர்களது மதத்திற்கு மாற கட்டாயப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி அவரது நண்பரை அழைத்து என்னை அடித்து துன்புறுத்துகிறார். இந்நிலையில் கோயிலுக்குச் சென்று வருகிறேன் எனக் கூறி அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வினியா மற்றும் அவரது குடும்பத்தாரிடமிருந்து என்னுடைய கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு வருட சம்பளத் தொகுதியை பெற்றுத் தர வேண்டும்" என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்..அதிகாரிகளுக்கு சேலம் ஆட்சியர் வலியுறுத்தல்!