தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமயம் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்! - Amit Shah at thirumayam temple

Amit Shah Swami Darshan: புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யகிரீஸ்வரர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 6:47 PM IST

Amit Shah
அமித்ஷா, அவரது மனைவி மற்றும் அண்ணாமலை (Credits - Annamalai 'X' page)

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யகிரீஸ்வரர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் கோட்டை பைரவர் ஆகிய கோயில்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மனைவியுடன் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதற்காக வாரணாசியிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித்ஷா, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து இறங்கினார்.

பின்னர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோருடன் சாலை மார்க்கமாக சுமார் 9 கிலோமீட்டர் தூரம் பயணித்து திருமயத்திற்குச் சென்று, அங்கு உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

குறிப்பாக, சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் கோயில்களில் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொள்ளும் பொழுது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலை ஓரமாக உள்ள கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொள்ளும் பொழுது செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா தனது மனைவியுடன் இணைந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக, அந்த கோயில் வாசலில் கூடியிருந்த பாஜகவினரைச் சந்தித்த அமித்ஷா அவர்களுக்கு கை கொடுத்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர், கோட்டை பைரவர் கோயிலில் உள்ள சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து மாலைகள் கொடுத்து, பட்டு வேட்டிகள் கொடுத்த நிலையில், அங்கு கொடுக்கப்பட்ட மாலையை அமித்ஷா அவரது மனைவிக்கு அணிவித்தார்.

இதன் பிறகு கண்களை மூடி நீண்ட நேரம் வழிபாடு செய்த அமித்ஷா, அந்தக் கோயில் வாசலில் சிவப்பு கம்பளம் பகுதியில் தேங்காய் உடைத்து வழிபட்டார். மேலும், தேய்பிறை அஷ்டமியான இன்று கோட்டை பைரவரை வழிபட்டால் வேண்டிய காரியம் நிறைவேறும் துன்பம் நீங்கும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

அதேபோல், வழக்கமாக இந்த கோயில் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வழிபட்டுச் சென்றால் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது. மேலும், அமித்ஷா வருகையை ஒட்டி, மூன்று கோயில்களிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொள்ள கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோட்டை பைரவர் கோயில் அருகே இருந்த நான்கு கடைகள் பாதுகாப்பு காரணத்தால் அடைக்கப்பட்டது. கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொண்ட சுமார் 20 நிமிடம் வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார். இங்கிருந்து புறப்பட்ட அவர், கானாடுகாத்தானில் உள்ள கால்நடை துறைக்குச் சொந்தமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குச் செல்லும் அமித்ஷா, அங்கிருந்து திருப்பதி செல்ல உள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த அமித்ஷா, இந்த கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மழையால் அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், “இரண்டு மாத காலமாக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலில் மக்களைச் சந்தித்து, பொதுமக்களே பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, 2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கக்கூடிய வகையில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நிறைவாக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் சாமி தரிசனம் செய்துவிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவரை தரிசனம் செய்தார்.

எனவே, தமிழகத்தில் உள்ள கடவுளின் ஆசியோடு 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று, மீண்டும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றார்.

இதையும் படிங்க:தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈர்க்கும் தியானம்.. கடைசி நேர யுக்தியா?

ABOUT THE AUTHOR

...view details