கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ள காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையினரும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாட்டு அறையை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 61 இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கூடுதலாக கண்காணித்து வருவதாகவும் மேலும் அந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உருவாகிறது ஃபெங்கால் புயல்! உஷார் நிலையில் தமிழகம்